Pages

Wednesday, September 28, 2011

முரட்டு மவுனம்


நம் மக்கள் கடைபிடிக்கும் மவுனம் இருக்கிறதே!!! அந்த முரட்டு மவுனம் அசாத்தியமானது, ஆம். உலகில் உலகத்தை விடுங்கள் இந்தியாவில் மற்ற மக்கள் பாதிக்கப்படுவதை கண்டும் காணாமலும், பட்டும் படாமலும், விட்டு விடுவதில் நம் மக்களுக்கு நிகர் யாருமில்லை,
உதாரணத்திற்கு, தலித்கள் விடுதலை- அவர்களுக்காக போராடும் கட்சிகள் அவர்களை ஓட்டு வங்கிக்காக மட்டும் பயன் படுத்துவது அறிந்ததே ஆனால் இன்று நேற்றல்ல காலா காலம் தொட்டும் அவர்கள் பாதிக்கப்படுவது அதற்காக யாரும் வலிமையாக குரல் கொடுத்ததாக தெரியவில்லை அம்பேத்கர், பெரியார் தவிர்த்து.

அண்மையில் நடந்த பரமகுடி சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு சும்மா ஒரு வாய்மொழி அறிக்கையோடு சரி. தலித்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது, அவர்களுக்காக போராடுபவர்களும் தாங்கள் slogan களாக வைக்கப்படும் திருப்பி அடி, திருப்பி புடி etc...ஒன்றும் புரியவில்லை நமக்கு. கூட்டத்தை காண்பித்து சீட் வாங்கி உட்கார்ந்தாகி விட்டது அவ்வளவுதான் ஏனெனில் கூட்டணி ஆயிற்றே ஒன்றும் பேச முடியாது.
வடகிழக்கு மாகாணங்களில் நிலவும் அரச பயங்கரவாதத்தை பற்றி  நம் தலைவர்கள் பேசுவதே இல்லை, அதாவது அவர்களுக்கு தெரியாது போலும் மற்ற செய்திகளை பற்றி, நாட்டில் பிற பகுதியில் என்ன நடக்கிறது என்ற கவலை கிடையாது போலும் டெல்லிக்கு போய் வருவதோடு சரி. பாதிக்கப்பட்டவர்களுக்காக யாரும் பரிந்து பேசுவோர் இல்லை.
காஷ்மீரில் வாரத்திற்கு ஒரு முறை காணாமல் போகும் நபர்கள் பற்றி, நமது இராணுவம் நிகழ்த்தும் வல்லுறவுகள் பற்றி, நடையில் உள்ள கடுமையான சட்டங்கள் பற்றி, ஒரு மாநிலமே அந்த மக்களே சில வருடங்கள் பின் தங்கிய நிலைபற்றி, இவையெல்லாவற்றையும் பற்றி அந்த மக்கள் தனது குடும்பத்தோடு தெருவில் வந்து போராடினாலும், ஒரு நாதியில்லை சீண்டுவதற்கு, ஆதரவாக குரல் கொடுக்க யாருமில்லை, உதவிக்கரம் நீட்ட யாரும் இல்லை.


நன்றாயிருக்கிறது நம்மவர்கள் காக்கும் இந்த முரட்டு மவுனம்

Monday, September 19, 2011

ஒரு சார்பு போராட்டங்கள்


கடந்த வாரம் பாலிமர் டிவியில் ஒரு விவாதம், ராஜீவ் கொலையாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனைக்காக காத்திருப்பவர்களை தூக்கில் போடக்கூடாது என்பவர்களும் - எதிர் தரப்பில் காங்கிரஸாரும் விவாதித்தனர்.

அதில் பேசிய அருள்மொழி என்ற வழக்கறிஞர் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் “குஜராத் கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்புக்கு காரணமானவர்கள் என சந்தேகிப்படுபவர்கள் தண்டனை பெற்று விட்டனர், ஆனால் அதற்கு பிறகு நடந்த கலவரத்தை இன்னார் வந்து என்னை கற்பழித்தார், இன்னார் தான் வந்து இவ்வளவு கொலை செய்தார் என சுட்டி காட்டப்படுபவர்கள் சுதந்திரமாக வலம் வருகின்றனர். இதுதான் நீதியா அதனால்தான் தூக்கு தண்டனையே வேண்டாம் என வாதிடுகிறோம் என்றார்.
குஜராத்தில் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்காக யாரும் தமிழகத்திலிருந்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை.

   ராஜீவ் கொலையாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டபிறகு, காஷ்மீரின் பரூக் அப்துல்லாஹ் இன்னும் சிலர் அப்சல் குருவுக்கு ஆதரவாக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றும்வோம் என அறிக்கை விடுத்தனர். உடனே கொக்கரித்தனர்் காவிகள்.

கூட்டு மனசாட்சியின்(!!!) அடிப்படையில் தூக்கு விதிக்கப்பட்டவர் அப்சல் குரு. அருந்ததி ராய் மற்றும் அவரது குடும்பமும்,  மனைவியும் தான் நீதிக்காக போராடுகிறார்கள். 

இவருக்காக யாரும் நம் மண்ணிலிருந்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை.

வடகிழக்கின் காந்தி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா. 10 வருடம் உண்ணாமல் போராடி வருகிறார் வடகிழக்கில் வழக்கில் உள்ள கடுமையான சட்டங்களை நீக்க கோரி. 

இவருக்காக யாரும் நம் மண்ணிலிருந்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை.

நாம்  இந்தியர்கள் என்றால் நீதி எல்லோருக்கும் தானே!  இவர்களுக்காக தமிழகத்திலிருந்து யாரும் குரல் கொடுத்ததாக தெரிய வில்லை.
நாம் இன்னும் பழமையில்தான் இருக்கிறோம். அதாவது, என் மொழி பேசுபவன் என்று ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்க்குள் போராடுகிறோம், மற்றவர்கள் மற்ற மாநிலத்தவர்கள், மற்ற மொழி பேசுபவர்கள் என்றால் ஒரு அறிக்கை கூட விடுவதில்லை. ஆனால் தமிழகத்தின் தலைசிறந்த தலைவர் இ.வெ.ரா பெரியார் இன்றுள்ள தலைவர்கள் போல் அல்ல, கேரளாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார் என்பதை நாம் வரலாற்றில் பார்க்க முடிகிறது.

ஆனால் தற்போது மொழி என்ற இந்த குறுகிய வட்டத்திற்க்குள் இருந்து கொண்டு தன் மொழிச்சார்ந்தவருக்காக போராடுபவர்கள் எப்படி நீதி மான்கள் ஆவார்கள், அவர்கள் எப்படி நியாயமான அரசியல் வாதிகள் ஆக முடியும்? அவர்கள் எப்படி ஜனநாயகத்தை நிலை நாட்டுவார்கள்? அவர்கள் யாரக இருந்தாலும் என்ன? எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன அல்லது சமீபமாக ஈழ விடுதலைக்காக(!) கவனிக்கத்தக்க வகையில்  நெடுங்காலமாக போராடும் நெடுமாறன்கள் ஆகட்டும் அல்லது புதிதாக வந்து தொண்டை கிழிய பேசும் சீமான்களாகட்டும்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!!!!

Thursday, September 15, 2011

என்னை கவர்ந்த புத்தகம்


என்னை கவர்ந்த புத்தகம்

சமீபத்தில் படித்த ஒரு நல்ல புத்தகம்

ஆசிரியர் தலித் விடுதலை எதில் என்பதை அருமையாக விவாதிக்கிறார்.

தலித் அரசியலிலா? கிறிஸ்தவத்திலா? தனி ஈழத்திலா? புத்தமதத்திலா? கம்யூனிஸத்திலா? 

எதில் தலித்களின் விடுதலை என்பதை அலசி ஆராய்கிறார் ஆசிரியர்.

பதிவுலகில் உள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நன்றி

Wednesday, September 14, 2011

பாபர் ஹூமாயுனுக்கு எழுதிய உயில் - Follow up 2


நமது முந்தைய பதிவில் பாபர் ஹூமாயுனுக்கு எழுதிய உயில் பற்றியும் அது பற்றி ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வந்தது பற்றியும் follow up ஆக எழுதியிருந்தோம்,

தற்போது அதே கருத்தை உடைய மற்றொரு பதிவை பார்க்க முடிந்தது அதை தங்கள் பார்வைக்கு

Tuesday, September 13, 2011

மரண தண்டனை வேண்டாமா!!!


  இன்று அதிகளவில் நடக்கும் விவாதங்கள், கூட்டங்கள், கண்டனங்கள் இவை அனைத்தும் நிச்சயமாக தூக்குதண்டனையை பற்றியதாகத்தான் இருக்கிறது.

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதில் தொடங்கி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது குரல்கள்.

சிலர் அவர்கள் நேரடி தொடர்புடையவர்கள் அல்லர் அல்லது இத்துணை வருடம் அவர்கள் சிறையில் கழித்து விட்டார்கள் என்று கூறி தூக்கை நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள், மறுபக்கம் தூக்கில் போடவேண்டும் என காங்கிரஸார்கள் ஒருபக்கம்.

சிறையிலிருப்பவர்கள் சார்பில் வாதிடுவபர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழகத்தில் தனிஈழத்திற்க்கு ஆதரவளிக்கும் ஆதரவாளர்கள் மொத்தமாக  தண்டனையே வேண்டாம் என வாதிடுகிறார்கள்.

நமக்கு ஆச்சர்யமளிக்கும் விஷயமே இந்தியாவில் அன்றாடம் அதிகரித்துவரும் குற்றங்களை, கொடூரக்கொலைகளை அன்றாடம் செய்தித்தாளில் பார்த்து படித்து வருபவர்கள் இப்படி பேசுவதுதான் ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் உள்ளது.


ராஜிவ் காந்தி கொலையாளிகள் நிரபராதிகள் அல்லது அவர்கள் தூக்கில்தான் போடப்பட வேண்டும் என்பதற்க்காக வாதிட வரவில்லை நாம், மாறாக தூக்குதண்டனையே எடுத்துவிடவேண்டும் என்று வாதிடுவது தவறு என்பதைதான் நாம் சுட்டிக்காட்ட முனைகிறோம்.


சரி, அப்படியென்றால் நொய்டாவில் குழந்தைகளை கொன்றவரை விட்டு விடலாம், கூட்டு கொலைகள் செய்தவரை விட்டுவிடலாம், போபால் விஷ வாயுவிற்க்கு காரணமானவர்களை விட்டுவிடலாம், பெண்களை கடத்தி கற்பழித்து புதைத்தவரை விட்டுவிடலாம் அல்லது ஈழ படுகொலைகளுக்கு காரண கர்த்தாவான ராஜபக்க்ஷேவை ஜெயிலில் அடைத்தால் மட்டும் போதும் வேறு எந்த கொடூர மரண தண்டனையும் வேண்டாம்  அப்படித்தானே!!!

ஏன் இப்படி வாதிடுபவர்கள் வீடுகளில் இது போன்று பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதாலா அல்லது பத்து வீடு தள்ளித்தானே வீடு எரிகிறது என் வீட்டிற்க்கு வராது என்று நினைப்பில் சொல்கிறார்களா? நமக்கு புரியவில்லை.

தூக்கு தண்டனையே இல்லாது இருக்கும் நாடுகளில் குற்ற எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் குறைகிறது என்ற ஆதாரத்தை காட்ட முடியுமா? இதை விட கடுமையான தண்டனைகளான தலை வெட்டு போன்றவை இருக்கும் நாடுகளில் குற்றங்கள் குறைவாக நடப்பதேன்?

நேர்மையாக பேசவேண்டும், மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?


நாட்டில் சிறையில் வாடுபவர்கள், அப்பாவிகள், நீதி மறுக்கப்பட்டவர்கள் இவர்களுக்காக குரல் கொடுங்கள், மனித உரிமைகள் இன்னும் பேணப்படவேண்டும் என்பதற்காக குரல் கொடுங்கள், இப்பொழுது நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் இன்னும் கடுமைவேண்டும் என்பதற்காக குரல் கொடுங்கள். அது தான் சரியானது.


ஒரு படத்தில் ஒரு காமெடியன் சொல்வார் “தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும்” என்று, சமூக சிந்தனையாளர்களுக்கு எட்டாதது படத்தில் மற்றவர்களை சிரிக்கவைக்கும் அவருக்கு எட்டியிருக்கிறது.

ஏட்டுச்சுரகாய் கறிக்கு உதவாதுதான்!!!!Saturday, March 5, 2011

பொருளாதார உலகின் எய்ட்ஸ் - வட்டி

இன்று உலகை ஆட்டி படைக்கும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை அச்சுருத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப் பாரதூரமான பிரச்சினைதான் Global Economic Crisis உலக பொருளாதார மந்த நிலை.

1920 களில் ஒரு பொருளாதார மந்த நிலை தோன்றியது அதன் தாக்கம் 10 வருடங்கள் தொடர்ந்தன, ஆனால் இன்றைய பொருளாதார பாதிப்பானது அதை விட பயங்கரமானதாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

2015ம் வருடம் பஞ்சம் தோன்றும் என்றும் அதனால் மிகப்பெரிய அளவில் உலகில் உணவிற்கான பிரச்சினைகள் வரும் என்று UNO என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.

இது போன்ற பிரச்சினைகள் அனைத்து சமூகங்களையும் பாதித்திருக்கிறது, இதற்கான காரணங்களாக சொல்லப்படுவது "High Risk Investment" என்ற அபாயம் கூடிய முதலீடுகள்.

மனிதன் பொருளாதாரம் தேடும் இயந்திரமாக, ஒரு விலங்காக பொருளாதாரத்தை தீவிரமாக தேடும் போக்கினாலும், வியாபாரத்தை Gambling என்ற நிலைக்கு கொண்டுவந்ததன் காரணத்தால் ஏற்பட்டதுதான் இந்த உலக பொருளாதார மந்த நிலை.

அதாவது வேகமாக பொருள் தேடவேண்டும் உடனடியாக தேடவேண்டும் என்ற நிலை. அதுமட்டுமல்லாமல் அதிக அளவில் கொடுக்கப்பட்ட கடன்கள்,
No income, No job, No Assets, அதாவது வேலை தேவையில்லை, வருமானம் தேவை யில்லை, சொத்துக்களும் தேவையில்லை ஆனால் கடன் கிடைக்கும் என்ற ரீதியில் தாறுமாறாக கொடுக்கப்பட்ட கடன்கள் திரும்பி வரும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்ட பணம், அதனால் திவாலான நிதி நிறுவனங்களில் தொடங்கி ஆரம்பிக்கிறது இந்த உலக பொருளாதார மந்த நிலை.

அனைத்தும் கடன் மயம், கடனை வாங்கி கடனை விற்பது, கட்டட நிர்மாணத்திற்கு கொடுக்கப்பட்ட வரா கடன்கள் அதாவது கற்பனையை அடிப்படையாக வைத்து கொடுக்கப்பட்ட கடன்கள்.

ஒரு இடத்தில் இந்த வகையான கட்டிடம் வரப்போகிறது இன்ன இன்ன வசதிகள் நிறைந்தது என படங்களை காட்டி பணம் பண்ண ஆரம்பித்து அதற்காக கடன் கொடுக்க ஆரம்பித்து அவைகள் வராக் கடன்களாக போயின.

அமெரிக்காவைப் பொறுத்தவகையில் இந்த home loans எனப்படும் வீட்டுக் கடன்கள் அதிக அளவில் கொடுக்கப்பட்டதும், வீடுகளின் விலை ஏறினாலும் அதிக வட்டியை நோக்காக கடன்கள் வீடு வாங்குபவர்களுக்கு கொடுக்கப்பட ஒரு விதத்தில் அந்த கடன்கள் திரும்பி வராத நிலையில் வங்கிகள் மூழ்கிப்போகின என்கின்றன பத்திரிக்கைகள்.

மற்றொருவகைதான் Low Risk investments, அதாவது லாபத்தை மட்டுமே பார்ப்பது நஷ்டத்தில் பங்கு எடுப்பதில்லை. இந்த வகையான முதலீடுகள், இந்த வகையில் மட்டும் பல டிரில்லியண்கள் நஷ்டமடைந்ததாகவும், இதனால் பல நிதி நிறுவனங்கள் பயங்கர வீழ்ச்சி கண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இவை அனைத்தும் எதை வைத்து கொடுப்பட்ட கடன்கள்? நிச்சயமாக அதிக  வட்டியை எதிர்பார்த்து கொடுக்கப்பட்ட கடன்களே. ஆனால் நிலைமை கைமீறிப் போனது .

அதனால் தான் சொல்லப்படுகிறது ‘பொருளாதார உலகின் எய்ட்ஸ்தான் இந்த வட்டி,

இப்பொழுது உலக அறிஞர்கள் சொல்ல முனைகிறார்கள் வட்டியானது 0% அடையும் வரை இந்த பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்குமென்று.

1990களில் கம்யூனிஸ பொருளாதாரக் கொள்கை தோல்வி அடைந்தது,  சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பி வந்த கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள் தந்த முதல் பேட்டியில் சொல்கிறார் ‘ கியூபாவிற்க்கு இனி கம்யூனிஸ பொருளாதாரம் உதவாது’ என்று.

அதே போல்தான் வட்டியை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையும் அடியோடு மாற்றப்பட வேண்டும்.

நான் எத்தனை சத்தியங்கள் வேண்டுமானலும் செய்யலாம் உலகில் வட்டியை சார்ந்த பொருளாதாரமானது வறுமையை ஒழிக்க முடியவே முடியாது என்று.

நன்றி: அகார் முகம்மது. இலங்கை , Wikipedia(economic crisis 2007)Monday, February 28, 2011

மக்களை பிடித்த தீராத பிணி - வட்டி


ஈரான் மற்றும் இன்ன பிற ஆசிய நாடுகளில் ஒரு டீ குடிப்பதற்கு ஒரு பை நிறைய பணம் எடுத்து செல்ல வேண்டும், அந்த அளவுக்கு அந்த நாடுகளின் நாணய மதிப்பு அதள பாதளத்தில் வீழ்ந்து விட்டதனால்தான் அப்படி ஒரு நிலை

சில ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை கவனித்தோமானால் மக்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல நாட்கள் ஆகியிருக்கும், நல்ல உடை உடுத்தி பல மாதங்களாகியிருக்கும் அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் தாழ்ந்து போயிருக்கும், உணவு, உடை, இருப்பிடத்திற்க்கான போராட்டம் மிகைத்திருக்கும். காரணமும் அதேதான் அவர்கள் நாட்டு நாணய மதிப்பு ஒன்றுமில்லாமல் போயிருந்த காரணத்தினால்தான். 

உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி பேரிடியாக இருந்த சமயத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை எந்த அளவிலும் பாதிக்கபட வில்லை.

ஆனால் நமக்கு தெரியாமல் உள்ள சீரியஸான விஷயம் ஒன்று உள்ளது அதுதான் நாட்டின் மீதுள்ள கடன் சுமை,

இந்தியாவின் கடன் சுமை 33 லட்சம் கோடிகள்

தமிழ் நாட்டின் கடன் சுமை 1 லட்சத்து 4000 கோடிகள்

இது வருடா வருடம் அதிகரித்து வருவதுதான் வேதனை, எனக்கென்ன நான் நிம்மதியாக உள்ளேன், நான் சம்பாதிக்கிறேன், சொத்துக்கள் சேர்க்கிறேன், வங்கி இருப்பு இவ்வளவு என நாம் நிம்மதியாக இருந்து விட முடியாது. நம் நாட்டின் நாணய மதிப்பு ஒரே இரவில் சரிந்தால் நிலை, நம் பணகட்டுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்.

உலகில் ஒரு பக்கம் பணம், பணம் இருப்பவர்களிடம் சேர்வதும் ஏழைகள் மேலும் ஏழைகளாக போவதற்க்கும் முழு முதற் காரணமாவது வட்டியை சார்ந்த பொருளாதாரமே.

ஆனால் நாம் இதை யாரும் உணர்ந்து கொள்வதாகவே தெரிய வில்லை,

உதாரணத்திற்க்கு ஒரு பொருளின் உற்பத்தி விலை 2 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த நிறுவனமோ அல்லது அதன் உற்பத்தியாளரோ பட்ட கடனுக்கு வட்டியாக ஒரு தொகை அந்த பொருளின் மேல் வைக்கப்படுகிறது அதற்கு பிறகு நம் கைக்கு அப்பொருள் 10 ரூபாய்க்கு வந்து கிடைக்கும்.

இதிலிருந்து யார் அந்த மறைமுக வட்டிக்கு காசு கொடுக்கிறோம், மக்கள்தான். இதனால்தான் அனைத்து பொருட்களும் அதன் உற்பத்தி விலையுடன் லாபம் சேர்த்து குறைந்த விலைக்கு விற்க முடியும் ஆனால் அந்து நிறுவனம் பட்ட கடன், வட்டி எல்லாம் சேர்ந்து அந்த பொருளின் மேல் விடிகிறது , அப்பொருள் அத்தியாவசியமானதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் தங்கள் தலை மேல் சுமந்து கொள்ள நேரிடுகிறது.

இங்கு கந்துவட்டி, மீட்டர் வட்டி என பல கந்து வட்டிகள் மக்கள் முன்னிலையில் இருந்தாலும் அதை அனைவரும் தவறு என்று மறுப்பதிற்க்கில்லை. ஆனால் நம்மை ஆண்டிகளாக்கும் நம் கண்களுக்குத் தெரியாத வட்டிகள் நாட்டில் மலிந்துள்ளன. 

இதனால் நாடு ஏதோ செழிப்படைவது போல் இருந்தாலும் அதன் வேரை செல்லரித்து விடுகிறது இந்த வட்டி. அதனால் நாடும் நாட்டு மக்களும் முன்னேற முடியவே முடியாது ஆனால் எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்து விடும் பொருளாதார கொள்கை தான் இந்த வட்டியை சார்ந்த பொருளாதாரக் கொள்கை.

நம் நாட்டில் வட்டியில்லாத முதலை(Capital) நம் அரசே கொடுத்து, யார் தொழில் செய்ய முன் வருகிறார்களோ,யாருக்கு தகுதி இருக்கிறதோ அவர்களுக்கு சொத்து அல்லது வேறு உத்திரவாதத்துடன் வட்டியில்லாத வகையில் தொழில் தொடங்க ஊக்குவித்து பாருங்கள், அந்த நபர் எவ்வளவு உற்சாகத்துடன் அந்த தொழிலில் ஈடுபடுவார் என்று. உற்பத்தி பொருட்கள் மிக குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கப்பெறலாம். இதை இல்லை என்று யாராலும் மறுக்க முடியுமா?

ஒரு பக்கம் உணவிற்கான இடங்கள் குறைந்து வருவது மற்றொரு பக்கம் வட்டியை சார்ந்த பொருளாதாரத்தால் நாட்டில் ஏழைகள் அதிகரிப்பு, ஆக மொத்தம் வரும் காலத்தில் இந்தியா மற்றொரு நாட்டிற்கு தானாகவே காலணியாவதை யாராலும் தடுக்க முடியாது.

பின்பு உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் நாட்டில் உள்நாட்டு போர், கலகங்கள் என்று நாடே சீர்கேடாகிவிடும் ஆப்பிரிக்க நாடுகள் போல.

வட்டி என்ன அவ்வளவு மோசமானதா? நாம் என்ன ரொம்ப பேசுகிறோமா? இல்லை உண்மை இதுதான். பெரிய கம்பெனிகள் முதல் அன்றாடங்காய்ச்சி வரை அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் ஒரு முக்கியமான நோய்தான் இந்த வட்டி.

உங்களுக்கு அருகில் உள்ள யாராவது வியாபாரியிடம் போய் நீங்கள் வட்டியில்லாம் கடன் பெற்று வியாபாரம் செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டுப்பாருங்கள், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று. அவர்களுக்குதான் அதன் அருமை தெரியும்.

நம் நாட்டில் உள்ள வங்கிகளை அனுகினால் அவர்கள் ஏராளமான விவசாயத்தொழில்களுக்கு கடனும் அரசாங்க மானியமும் தருவதாக சொல்வார்கள், மானியம் போக மீதி உள்ள தொகைக்கு வட்டி கட்டிதான் ஆகவேண்டும். 

அதனால்தான் நாட்டில் விவசாயிகள் தற்கொலைகள் நடப்பதை பார்க்கிறோம். இது எதனால்?

நான் அந்த அளவில் பொருளாதரத்தில் வல்லுனர் அல்ல ஆனால் எனக்கு தெரிந்த வகையில் வட்டியின் கொடுமை பற்றி சொல்ல முனைந்துள்ளேன்.

உலகில் சில நாடுகளில் வட்டியில்லாத வங்கிகளும், இந்தியாவில் சில குழுக்களும் வட்டியில்லாத கடனை கொடுத்து வருவது பாராட்டத்தக்கது. இன்னும் வட்டியில்லாத வங்கியின் நடைமுறைகளை நான் அறியும் பட்சத்தில் அதை தனி பதிவாக வெளியிடலாம்.

நன்றி

Monday, February 21, 2011

பெண் குழந்தைகள்


இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 50 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதாக சொல்கிறது ஆய்வு.

இன்றும் பெற்றோர்களிடையே, இந்திய மக்களிடையே பெண் குழந்தைகள் என்றால் சிறிது இளக்காரம்தான். 

இன்றும் கசப்பாகத்தான் இருக்கிறது தனக்கு பெண் குழந்தைகள் பிறந்தது என்றால்.

அதனாலேயே அனுதினமும் அழிக்கப்பட்டுவருகிறது பெண் சிசுக்கள்,
படித்தவர்கள், பாமரர்கள் என்றில்லாமல் பெண் சிசுக்கொலைகள் நமது நாட்டில் நடந்து வருவது வருந்தத்தக்க விஷயம்.

முன்னொரு காலத்தில் ஒரு விவாதம் அதாவது பெண்களுக்கு ஆன்மா இருக்கிறாதா என்றொரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது, பின்பு பெண்களை அடிமைகளாகவும், பிள்ளை பெற்றுத்தரும் பொருளாகவும் பார்க்கப்பட்டனர்.

மதகுருமார்களால் வெருப்புக்குள்ளானார்கள் பெண்கள். பெண்கள் என்றால் அசிங்கம், தீட்டு என்று பலவாறாக.

அதன் தொடர்ச்சிதான் பெண்களை வெறுப்புக்கண்ணோடு பார்க்கத்தோன்றியது. சமூகத்தில் ஒருவருக்கு பெண் குழந்தை பெற்றால் அது இழுக்காக பார்க்கப்பட்டது தொடர்ச்சியாக அது பெண் குழந்தைகளை அழிக்கத்தூண்டியது.

ஆனால் இன்று இத்தனை ஆண்டுகள் கடந்தும், இவ்வளவு கொள்கைகள், கோட்பாடுகள், நாகரீகம், நவீன யுகம், இண்டெர்நெட் என்று எவ்வளவோ இருந்தாலும் இந்திய மக்கள் மட்டும் ஏன் இப்படி திருந்தவே மாட்டேன் என்கிறார்கள் என்று தெரியவில்லை. மேற்சொன்ன வருடத்திற்கு 50 லட்சம் கருக்கொலைகள் என்பது சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே.

இதிலிருந்து இந்த படித்த நவீன யுகத்திலும், 2020ல் உலக வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் நம் நாட்டில் இப்படியெல்லாம் நிகழும் நிகழ்வுகள் நம்மை காட்டுமிராண்டிகளாகதான் காட்டுகின்றன.

பெண்கள் நாடாளுகிறார்கள் அனைத்து துறையிலும் கோலோச்சுகிறார்கள் அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு வலைப்பூதளத்தில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது அந்த வலைப்பூவின் பெயர் மறந்து விட்டேன், அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் எதார்தத்தை பெண்குழந்தைக்ளின் அல்லது பெண்களின் உண்மை நிலவரத்தை ஒரு பெற்றோராக இருந்து அனுபவபூர்வமாக சொல்கிறார், பெண்குழந்தைகள் ஆண் குழந்தைக்கு மேலானவர்கள் என்று. ஒரு பெண்குழந்தை பெற்றால் பாக்கியசாலி இரண்டு பெண்குழந்தைகள் பெற்றால் மகா பாக்கியசாலி என்று.

அதேதான் நானும் சொல்லவருவது தற்பொழுது நாட்டில் நடந்து வரும் நிகழ்வுகளும், இந்திய குடும்பங்களை உற்று நோக்கினால் உணர்ந்து கொள்ளலாம் பெண்குழந்தைகளின் மேன்மையை.

ஒரு ஆண் குழந்தைக்கு வயதுக்கு வந்தவுடன் குடும்பம் உறவினர்கள் தவிர வேறொரு வாழ்க்கை இருக்கிறது அவனுக்கு, வெளியில் என்ன வாழ்க்கை வாழ்கிறான் என்பதையும், எங்கு போகிறான் எங்கு வருகிறான், அவனது வெளிஉலக பழக்கம் என்ன, பழக்கவழக்கங்கள் என்ன, அவனது அறிவு எதை நாடுகிறது, என்பதை எல்லாம் நாம் அறிந்து கொள்ளமுடியுமா? மிகப்பாரமானதும், மிகச் சிரமமானதுமான விஷயமாக்கும் அது.

அதனால்தான் எத்தனையோ ஒழுக்க சீலர்களான பெற்றோர்களுக்கு ஒழுக்கக்கேடு உடைய பிள்ளைகள் இருப்பதை பார்க்கிறோம்.

அதே ஒரு பெண்குழந்தை வயதுக்கு வந்தவுடன் அவளை எளிதில் கண்காணித்து விடலாம், எப்படியும் வீட்டிற்கு வந்து விடுவாள், வீட்டில் சிறிது உஷாராக இருந்தாலே கெட்டு போவதற்கு உண்டான வழிகளை அடைத்துவிடமுடியும் பெற்றோர்களால். மேலும் எதார்தத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் நிறைந்தவர்கள் பெண் குழந்தைகள்.

சரி இது ஒருபக்கம் இருக்கட்டும், நாம் வயதானால் நாம் நல் ஒழுக்கங்களை பேணிவளர்த்த ஆண் பிள்ளைகள் நம்மை கண்ணியப்படுத்தும் என்பது எந்தளவுக்கு உறுதியாக நம்பமுடியும், முடியாது. ஒரு மனிதனது வாழ்வு இரண்டு முக்கிய தருணங்களில் மாறுகிறது ஒன்று அவன் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது மற்றொன்று திருமணத்திற்கு பின்பு.

சம்பாதித்த பிறகு கூட சரியாகி விடும் மனிதன், இரண்டாவது விஷயத்தில் திணருகிறான். லேசான மனக்கசப்புகளுக்கு கூட அவன் பெற்றோர்களை கடிந்து கொள்வதில் ஆரம்பித்து, முதியோர் இல்லங்களில் வந்து முடிகிறது சில பெற்றோர்களுடைய வாழ்க்கை.

இந்த விஷயங்களில் பெண்பிள்ளைகள் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

ஆதலால் ஒரு பெண் பிள்ளையானால் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் இரண்டு பெண்குழந்தைகளானால் மாகா பாக்கியசாலிகளே.


Thursday, February 10, 2011

ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் மொழியில் "சமூக விடுதலை”


சமீபத்தில் ஒரு நிகழ்வு..

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி தனது மெய்காப்பாளரை தனது ஷூவை துடைக்கச் சொல்கிறார், இதை சிறிதும் எதிர்பாராத அந்த அதிகாரி குனிந்து துடைக்கிறார், (வேறு என்ன செய்ய முடியும்).

இவர் துடைத்துக் கொண்டிருக்க அவர் மற்றவர்களுடன் தனது பேச்சை தொடர்ந்துள்ளார்.

மாயாவதி இதுபோல் சர்ச்சையில் முதல் தடவை அல்ல.

எத்தனையோ கோடி ரூபாய்க்கு தொண்டர்களால் மாலை அணிவித்தது, அரசு செலவில் தனக்கு சிலை என அவர் தன்னால் முடிந்த தொண்டை(!) செய்துதான் வருகிறார்.

இதுதான் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் தங்களுக்கு கிடைத்த வெற்றி என நினைப்பார்களோ, ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு அதிகாரம் கிடைத்தால் எவ்வளவோ ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தலாம் ஆனால் இவர் என்னவென்றால்.......

தான் ஒரு ஒடுக்கப்பட்டவர் என்று பிரச்சாரத்தின் மூலம் ஆட்சிவந்து அனைவரையும் கவர்ந்தார், இந்தியாவின் பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் முதல்வராகிவிட்டார் இந்தியா முன்னேறி வருகிறது என்று நினைத்தவர்களுக்கு மாயாவதியின் செயல்கள் சதிலீலாவதி போல் இருப்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாகதான் உள்ளது.

தனது ஷூவை துடைத்தவர் மேல் ஜாதி அதனால் அவர்களை இழிவு படுத்த நினைக்கிறாரா? அல்லது ஒரு ஆணை தன் கீழ்படிய வைத்த நினைப்பா? என்னவென்று தெரியவில்லை.

இதுதான் சாதி ஒழிப்பில் ஈடுபட்ட தலைவர்கள் நடந்து கொள்ளும் விதமா? இது போன்ற நிகழ்வுகள்தான் அனைத்து மக்களுக்கும் ஜாதியின் கொடுமை பற்றி பறை சாற்றும் விதமா?

இந்த நிகழ்வை பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? அதை நான் இங்கு எழுதினால் சர்ச்சையாகிவிடும். 

நாமும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதில் சளைத்தவர்கள் இல்லை, 

இங்கிருக்கும் ஒரு ஒடுக்கப்பட்டவர்களுக்கான கட்சியின் மாவட்ட பொருப்பில் இருப்பவர் செய்யும் கூத்து இருக்கிறதே சொன்னால் ஒரு கட்டுரை போதாது, சகோதர சமுதாயத்தை தாக்குவதாகட்டும், கட்டப்பஞ்சாயத்தாகட்டும் இன்னும் எவ்வளவோ, இது அந்த கட்சித் தலைமைக்கும் தெரிந்திருந்தும் எந்த வித நடவடிகையும் இல்லை அவர்மேல்.

நான் கேட்கிறேன் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் மொழியில் சமூக விடுதலை என்பது இதுதானா? 


மற்ற சமூகத்தினர் தன்னை “மரியாதையுடன்” நடத்தவேண்டும் என ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் நினைப்பது இப்படித்தானோ?


மிகவும் வருந்த தக்க விஷயம் என்னவெனில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாய்த்த தலைவர்களை பற்றித்தான்.

செய்தி உபயம் பாலைவனத்தூது


Wednesday, February 9, 2011

எருமை மாடும், விவசாயமும்


முன்பெல்லாம் நல்லா படிக்காத என்னை போன்ற மக்கு பிள்ளைகளை பெற்றோர்கள் திட்டுவார்கள், படிப்பு ஏறலைன்னா போய் எருமை மாடு மேய்க்க வேண்டியதுதான் என்று.

இப்பொழுது அப்படி சொல்ல முடியாது ஏனெனில் மாடு மேய்பதென்பது நல்ல வருமானமுள்ள, நிம்மதியான தொழில் இன்றைய நிலையில்.

அதிலும் எருமை மாடு மேய்பதென்பது அதை விட அருமையான லாபம் தரக்கூடிய தொழில், பால் அடர்த்தி மிகுந்தது. அதனால் பிள்ளைகளை திட்ட வேறு ஏதாவது புதிதாகத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் இப்பொழுது இவ்வித தொழில்களை யாரும் செய்வதற்கு முன் வருவதில்லை. வருங்காலத்தில் நமது நாட்டு எருமை மாடுகளை நம் பிள்ளைகளுக்கு பள்ளி பாட புத்தகத்தில்தான் காட்ட முடியும் என்று நினைக்கிறேன்.

வருங்காலத்தில் உலகில் லாபம் தரக்கூடிய தொழில் ஒன்று உண்டென்றால் அது நிச்சயம் விவசாயமாகத்தான் இருக்கும், 


ஆனால் சோழ வள நாடான தஞ்சை தரணியிலேயே விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது, தற்போது உள்ள கல்வி சூழ்நிலை,மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதைகள் போன்றவற்றால் அதிகம் பாதிப்படைந்தது விவசாயமும், நிலங்களும்தான்,

அதிகமும், உடனேயும் பணத்தை அள்ளும் வேலைகளுக்குதான் மவுசு அதிகம் மாணவர்களிடையே.. பின்பு என்ன...யார் உட்கார்ந்து... விவசாயம் படித்து....முன்னேறி...எப்பொழுது பணம் சம்பாதிப்பது.......இதெல்லாம் எப்பொழுது நடக்கும்.....

ஆனால் அதிசயதக்க விதத்தில் வருங்காலத்தில் விவசாய நிலம் வைத்திருப்பவர்தான் மிகுந்த மரியாதைக்குரியவராக இருப்பார் என்பது நிச்சயம்.

விட்டால் நகர வளர்ச்சிக்காக காடுகளின் மேலும் கைவைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


பாரதியார், காணி நிலம் வேண்டும்,
அழகிய மாளிகை வேண்டும்
அதில் 10 தென்னை மரங்கள் வேண்டும்
அங்கு குயில் வரவேண்டும்,
தென்றல் வரவேண்டும்,
 என்று பாடுவார்,  கேட்க நல்லாத்தான் இருக்கு


வரும்காலத்தில் இதைபோல் ஏட்டிலும், கற்பணையிலும் பார்த்தால்தான் உண்டு, 
                                 
ஆக எல்லோரும் இப்பவே காணி நிலத்தையும், எருமை மாடுகளையும் வாங்கி சேமித்து விடவும், பிற்காலத்தில் உதவும், பிளாட் போட இல்லை நமக்கு நாமே விளைத்து சாப்பிடுவதற்கு...
Wednesday, February 2, 2011

இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல

சமீப காலங்களாக செய்திகளிலும் அல்லது எதை திறந்தாலும் அடிபடுவது ஊழல்கள் பற்றி,

எந்த கட்சிகளும் பாரபட்சமின்றி தன் பங்கிற்கு இந்தியாவில் செய்தாகி விட்டது ஊழல்களை,

அது அவ்வப்போது வரும் பின்பு நாம் மறந்துவிடுகிறோம்.

அந்த வகையில் இந்திய அரசு சுவிஸ் அரசிடம் கேட்கும் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விடயம்தான் நான் எழுதுவது,

சுவிஸ் வங்கியில் உள்ள தொகை

280,00,000,000,0000 - 280 லட்சம் கோடி - இந்தியர்களது பணம் மட்டும்

இந்த தொகையை வைத்து கீழுள்ள மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு மின்னஞ்சல் வந்தது எனக்கு, அது அப்படியே தருகிறேன்
 • 30 வருடத்திற்க்கு வரியில்லாத இந்திய பட்ஜெட் போட முடியுமாம்
 • 60 கோடி வேலைவாய்பை ஏற்படுத்த முடியும் நமது நாட்டில்
 • எந்த கிராமத்திலிருந்தும் புது டெல்லிக்கு நான்கு வழி சாலைகள் அமைக்க முடியும்
 • 500 பொது நல திட்டங்கள் இலவசமாக தரமுடியும்
 • 20 கோடி மாணவர்களுக்கு 50 வருடங்களுக்கு இலவச கல்வி தரமுடியும்
 • ஒவ்வொரு இந்தியனும் 2000/-ரூபாய் மாதாமாதம் 60 வருடத்திற்கு பெறமுடியும்
 • உலக வங்கியிடமும், IMF யிடமும் நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை


சிந்தியுங்கள் நமது பணம் எப்படி பெரும் பண முதலைகளிடமும், அரசியல் வாதிகளிடம் அடைபட்டுள்ளது என்று


மேலும் காமென்வெல்த் ஊழல்கள், ஆதர்ஷ் கட்டட ஊழல், 2G அலைகற்றை ஊழல், கர்நாடகா எதியூரப்பா ஊழல்கள்...மற்றும் பல பல.......... உள்ளன அவைகளை நாம் இங்கு சேர்க்க வில்லை.


இதை அனுப்பி தந்த நண்பர் ஹாஜா அவர்களுக்கு நன்றிகள் பல.


இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?????
 


Saturday, January 29, 2011

விடுதலை வேங்கை - A Revolutionary Guard for Freedom Fight


அஸ்ஃபக்குல்லாஹ் கான் 


பிறந்தது ஷாஜஹான்பூர் - உத்திரபிரதேச மாநிலம்

இளமையிலேயே சுதந்திர தாகம் எடுத்தது அவருக்கு, அது அவரை ஒரு நல்ல கவிஞராகவும் ஆக்கிற்று.

அவரது பள்ளிப்பருவத்தில் மகாத்மா காந்தியால் ஆரம்பிக்கப் பட்ட ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வர அதனால் அதிருப்திக்குள்ளான இளைஞர்களில் அஸ்ஃப்பக்குல்லாஹ் கானும் ஒருவர்.

இந்தியாவிற்கு வெகு சீக்கிரம் சுதந்திரம் வரவேண்டும் என்றால் அது புரட்சியின் மூலம்தான் நடக்கும் என நம்பி அதற்கான களம் காண இறங்குகிறார்.

அவரையொத்த விடுதலை வேங்கைகள் கிடைத்தனர் அவருக்கு. 

அஸ்ஃபக்குல்லாஹ் கான் மற்றும் பண்டிட் இராம் பிராசாத் பிஸ்மில் ஆகியோர் இணைந்து மற்ற புரட்சிக்காரர்கள் ஒன்றினைக்கப் படுகின்றனர்.

மெதுவான பேச்சுவார்த்தைகள் ஒன்றும் வேலைக்கு ஆகாது, ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை குலை நடுங்க வைக்கவேண்டுமானால் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படவேண்டும். அதற்கு தங்களுக்கு வெடிகுண்டு, துப்பாக்கிகள் இன்ன பிற சாதனங்கள் வேண்டும், அவற்றை வாங்க பெரிய அளவு பணம் வேண்டும்.

பொது மக்களிடம் பணம் வாங்க முற்பட்டு அது நாளடைவில் குறைய பிறகு ஆங்கிலேய அரசு கருவூல பணத்தை கொள்ளை அடிக்க முடிவெடுக்கின்றனர் புரட்சிக் காரர்கள்.

ஆகஸ்ட் 9, 1925 முடிவு செய்தாகி விட்டது.

லக்னோவிற்கு அருகில் உள்ள கோரக்பூரில் வைத்து இரயிலில் ஏற்ற வரும் கருவூல பணத்தை கொள்ளை அடிப்பதென.

அதற்கான திட்டமும், நபர்களும் உறுதி செய்யப்பட.

வெற்றிகரமாக நடந்து முடிந்தது கொள்ளை ஆனால் ஆங்கிலேயர்களால் செப்டம்பர் 25, 1925 அனைவரும் பிடிபடுகின்றனர் அஸ்ஃபபக்குல்லாஹ் கானை தவிர, அவர் பிஹாருக்கு தப்புகிறார்.

சுதந்திர போரை மேற்கொண்டு முன்னிருத்த வெளிநாடு சென்று பொறியியல் கற்று பணமும் சேர்த்துவர எண்ணுகிறார் அதற்காக டில்லி செல்கிறார் அங்கு வைத்து கைது செய்யப்படுகிறார்.


சிறை வைக்கப்படுகிறார்

சிறையில் காவல்துறை அதிகாரி இந்து - முஸ்லீம் என்று மத ரீதியாக அவரை பிரித்தாள சூழ்ச்சி செய்கிறார். காவல் துறை அதிகாரியால் அனுப்பபட்டவனிடம் அஸ்ஃப்பக்குல்லாஹ் கான் சொல்கிறார் “ஆங்கிலேயர் ஆளும் இந்தியாவை விட இந்துக்கள் ஆளும் இந்தியா எவ்வளவோ மேல்” என்கிறார்.

அஸ்ஃப்பக்குல்லாஹ் கானுடன் மற்ற அனைவரையும் சேத்து கோரக்பூர் சம்பவம் கோர்டுக்கு வருகிறது 
1) அஸ்ஃப்பக்குல்லாஹ் கான்
2) இராம் பிராசாத் பிஸ்மில்
3) இராஜேந்திர லாஹிரி
4) தன்கூர் ரோஷன் சிங்
ஆகிய நால்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது ஆங்கிலேயே அரசால்.

சிறையில் இரண்டு வெள்ளைகார போலீஸ் அதிகாரிகள் அஸ்ஃப்பக்குல்லாஹ் கான் அடைக்கப்பட்டிருக்கும் அறையை கண்காணிக்க அப்பொழுது அவர் தொழுது கொண்டிருக்கிறார், அவர்கள் இருவரும் பேசிக் கொள்கின்றனர் “ இந்த எலியை நாளை தூக்கில் போடும் வரை எவ்வளவு பக்தி மீதமிருக்கிறது என்பதை நான் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்று.

திங்கள் டிசம்பர் 19, 1927 அஸ்ஃப்பக்குல்லாஹ் கான் தூக்கு மேடை ஏறுகிறார்.

கயிற்றை முத்தமிடுகிறார், பிறகு சொல்கிறார்.

“என் கை கறை படிந்தது அல்ல இவர்களை கொன்றதனால், இவர்கள் எனக்கு இன்று அநீதி இழைக்கலாம் நாளை இறைவன் எனக்கு நீதி வழங்குவான்” , 

“இறைவன் ஒருவனே அவனது தூதராக முஹம்மத் அவர்களை ஏற்கிறேன்” என்கிறார்.

தூக்கு கயிறு இருக்குகிறது,

இந்தியா ஒரு சுதந்திர வேங்கையும், சுதந்திரவானில் மின்னும் நட்சத்திரத்தையும் இழக்கிறது.

நன்றி: இந்திய முஸ்லீம்கள் மற்றும் செய்திகள், விக்கிபீடியா

Wednesday, January 26, 2011

பெண்களும்-வேலையும்-அவர்கள் படும் அல்லல்களும்

இந்த தலைப்பிற்கு உடனே பதில்கள் பறந்து வரும்.

பெண்ணியக்கவாதிகள், பெண்களுக்காக போராடுபவர்கள், பெண்ணுரிமை இயக்கங்கள் போன்றவர்களிடமிருந்து, பதில் எதிர்பார்த்ததுதான்.

ஆம், நாங்கள் இராணுவத்தின் அனைத்து துறையிலும், விமானம் முதல் வியாபாரம் வரை நாங்கள் இருக்கிறோம் என்பர், நாங்கள் இல்லாத துறைகளே இல்லை என்பர். சரிதான்.

ஆனால் பெண்கள் வேலை செய்ய ஏற்ற உடற்கூறு கொண்டவர்கள் இல்லை என்று சொல்பவர்களை, ஆணாதிக்கம் பிடித்தவர்கள், பெண்களை போகப்பொருளாக பார்ப்பவர்கள், பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிப்பவர்கள் என்பர்.

  அவர்கள் கோபம் நியாயமானதே எமக்கும் அவர்களை போகப்பொருளாக பார்ப்பதில் உடன்பாடு இல்லை, நாம் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிப்பவர்களும் இல்லை. சமூகத்தில் அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எண்ணி வருந்துபவர்களில் நாமும் உண்டு.
                                                                                  பெண்கள் உடற்கூறு ரீதியாக, கடின வேலைகள், அழுத்தம் நிறைந்த வேலைகள் செய்வதற்க்கு ஏற்ற அமைப்பை கொண்டவர்கள் கிடையாது அறிவியல் ரீதியாக.

சாதாரணமாக ஆண்கள் அலுவலகத்தின் பணியை தவிர வீடுகளில் வேலை செய்வதில்லை, வந்து அமர்ந்து வேறு வேலைகளில் மூழ்கிவிடுவர். ஆனால் இதே போன்றா பெண்கள் நிலை? முற்றிலும் வேறு.

இன்றைக்குத்தான் ஒரு வலைப்பூவில் காண நேர்ந்தது “நகரமா .....நரகமா” என்ற இளந்தூயவனின் வலைப்பூவில் அவர் எழுதிய ஒரு பத்தியை அப்படியே தருகிறேன் பாருங்கள்..

//எல்லாருக்கும் காலை பொழுது எத்தனை மணிக்கு தொடங்குமென்பது தெரியாது , ஆனால் சென்னைவாசிகளுக்கு 3 .00 மணிக்கு எல்லாம் தொடங்கி விடும். எழுந்ததில் இருந்து பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு உணவு, வேலைக்கு செல்லும் கணவருக்கு உணவு என்று தன் காலை வேலையை தொடங்கி, பிள்ளைகளை சீருடை அணிவித்து அவர்களை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டு விட்டு, பிறகு அலுவலகம் செல்லும் தன் கணவரை எழுப்பி அவருக்கு உரிய பணிகளை செய்து முடித்து, பிறகு பகல் உணவு தயாரிக்கும் பணியை தொடங்கி, அவை முடியும் நேரம் பள்ளியில் இருந்து திரும்பும் பிள்ளைகளை உடைகளை மாற்றி, அவர்களை டியுசன் படிக்க தயார் செய்து, அவர்களுக்கு இரவு உணவு கொடுத்து உறங்க வைக்கும் வரை பம்பரமாக சுற்றி தன் கடமையே கண்ணாக இயங்கும் குடும்ப தலைவியின் நிலை இது தான்.//

மேலே சொன்னதில் இளந்தூயவன் சாதாரண வேலைக்கு செல்லாத பெண்ணை பற்றி சொல்லி இருக்கிறார் ஆனால் இதற்கு இடையில் வேலைக்கும் சென்று வரவேண்டும் பெண்கள், அப்படி இருந்துவிட்டால் அவர்களின் நிலைமையை எண்ணி பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்.

அதாவது 24 மணி நேரத்தில் 8-10 மணிநேரம் ஆண்கள் வேலை செய்கின்றார்கள் என்றால் 24 மணி நேரத்தில் வேலைக்கு செல்லும் பெண்மணிகள் 15 மணிகளுக்கு மேலாக வேலை செய்கிறார்கள், அலுவலகம் செல்லும் முன்பும் பின்பும். இதுதான் சமூகம் அவர்களுக்கு தரும் விடுதலையா? இதை சொன்னால் நாங்கள் ஆணாதிக்கவாதிகளா?

பெண்களுக்கெதிரான கொடுமைகள்

10 வருடங்களுக்கு முன்பு ஒரு சர்வே; வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரிப்பெண்கள் இவர்களிடம் கேட்கப்பட்டது தாங்கள் யார் யாரால் பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளானார்கள் என்று?

பதிலில் தங்களது பணியிடங்களில், கல்லூரி நண்பர்களிடம், கார் ஓட்டுனர்களிடம் மற்றும் சொந்தங்கள் என்று சொன்னார்கள்.

இன்றுவரை வேலைக்கு செல்லும் பெண்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் சொல்லி மாளாது. சமீபத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இடங்களில் டெல்லிதான் முதலிடம் வகிக்கிறது.

சமீபத்தில் RAW என்ற இந்திய உளவுத்துறையில் தனது மேலதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை நாம் பத்திரிக்கையில் படித்திருப்போம். இதுபோன்ற இன்னும் எவ்வளவோ...

அமெரிக்காவில் பில் கிளிண்டனது காலத்தில் இராணுவத்தில் பெண்கள் பிரிவை ஏற்படுத்த அந்த பெண்கள் தங்களது மேலதிகாரிகளால் பெருமளவு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக பில் கிளிண்டன் பாரளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க நேர்ந்தது.

அமெரிக்க இராணுவத்தின் ஒரு சர்வே:

 • 2007ல் அமெரிக்க இராணுவத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் தாக்குதல்கள் 2688,
 • 41% பெண்கள் இராணுவத்தில் பாலியல் தாக்குதலுக்குள்ளாகினர்
 • ஒவ்வொரு வருடமும் பெண்களுக்கெதிரான பாலியல் தாக்குதல்கள் 2% லிருந்து 13% அதிகரித்து வருகிறது
 • ஒரு இராணுவ வீரன் எதிரியை வீழ்த்துவதை விட அதிகமாக எண்ணிக்கையில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்.
 • 2008ல் இராணுவத்தில் மட்டும் 1516 பாலியல் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன
 • 3ல் 1 பகுதி பெண்கள் தாங்கள் இராணுவத்தில் பணியாற்றும்போதுதான் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளானோம் என்று தெரிவித்துள்ளனர். 
எனக்கு தெரிந்து ஒரு அலுவலகத்தில் ஏதுமறியா ஒரு பெண் வேலைக்கு சேர்ந்து அவர் அனுபவித்த இன்னல்கள் ஏராளம், மிக உயர்ந்த மேலதிகாரி யாரும் இல்லாத நேரத்தில் தனது அருகில் நின்றுகொண்டு அதை செய் இதை செய் என்று ஏவியவாறு அசிங்கமான செயல் செய்வதாகவும் நான் அவர் முகத்தை பார்க்கவில்லை என்று சொல்லி சங்கடப்பட்டார்.

ஒரு ஆண் சமயம் சந்தர்ப்பம் வாய்க்கும்போது தான் ஆண் நீ பெண் என்பதை நிரூபிப்பான்.

சமூகத்தில் திருமண மாகத பெண்கள் வேலைக்கு செல்வதை பெண்ணுரிமை என்று கருதுகின்றனர். ஆனால் திருமணம் முடித்து அவளது கடமைகளையும் பிறரது கடைமைகளையும் முடித்து விட்டு வேலைக்கு சென்று படும் அல்லல்களை கருத்தில் கொண்டு பொதுவாகத்தான் இந்த விடயத்தை உற்று நோக்கவேண்டும்.

தவறு என்பது எல்லா இடத்திலும்தான் நடக்கும் அதற்காக பெண்கள் வேலை செய்யாமல் இருக்க முடியுமா? என்று கேட்க முடியாது, ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு நடுநிலையுடன் சிந்திக்கவேண்டும்.

போகப்பொருள்

அது ஒரு விளம்பரம், உலகின் மிக உயர்ந்த காருக்கான சந்தையில் அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட விளம்பரம், 

காருக்கு முன்னே அரை குறை ஆடையுடன் இரண்டு பெண்கள், 
குரல் ஒலிக்கிறது எங்கள் கார் இன்ன இன்ன வசதிகள் கொண்டது வேண்டுமானால் ஓட்டிப் பருங்கள் என்று. எதை? காரையா? அல்லது ..........

இதில் யார் போகப் பொருள், யார் ஆக்குகிறார்கள் இந்த நிலைமையை? இதை நாங்கள் சொன்னால் நாங்கள் பெண்ணடிமைவாதிகள்..

இதை பெண்ணுரிமை பேசுபவர்கள் புரிந்து கொள்வதில்லை.

முன்னர் டெல்லியில் உள்ள காவல்துறை உயரதிகாரி பெண்களும் தங்களது ஆடைகளை மற்ற ஆண்களை கவரும் விதமாக உடுத்துவதை தவிர்க்கவேண்டும் என்று சொன்னார்.

பெண்களின் ஆடைகளிலும் தவறுகள் இருக்கிறது,


எனினும் இது மிகப்பெரிய விடயம், இதை இவ்வளவு சுருக்கமாக விவாதித்து விட முடியாது. சில விஷயங்களை மட்டுமே கோடிட்டு காட்ட முனைந்துள்ளேன்.

தகவல்கள் உதவி: இளந்தூயவன், Sexual Assault of Women in the Military(by:Lexy Mayer and Joe Endress)