Pages

Thursday, November 15, 2012

இது இண்டர்நெட் யுகமா அல்லது இருண்ட யுகமா

            'அவர்கள் ஏதோ சாதி விழாவுக்கு செல்கிறார்களாம்' சமீபத்தில் சிதம்பரத்திலிருந்து பசும்பொன் தேவர் குரு பூஜைக்கு வேன்களிலும், சுமோக்களிலும் மக்களை பயமுறுத்தும் விதமாக கடந்து சென்ற வாகனங்களை பார்த்து இரண்டு பள்ளி சிறுவர்கள் மேற்சொன்னவாறு பேசிக்கொண்டனர்.

 சிறுவர்களுக்கே தெரிந்திருக்கிறது சாதிய விழாக்கள் பற்றி, அந்தந்த சமூகத்தை சேர்ந்தவர்களா ல் அவர்கள் சார்ந்த சமுதாயத்திற்கு உழைத்தவர்களுக்காக இது போன்ற விழாக்கள் எடுக்கின்றனர் தவறில்லை, தவறென்பது இதையொட்டி நடக்கும் கலவரங்களும் உயிர் பலிகளும் தான் நமக்கு கவலை.
சத்தியமாக நான் நினைத்ததுண்டு நாம் இருப்பது இண்டெர்நெட் யுகத்தில் நாளடைவில் இந்த சாதிய பிரச்சினைகள் ஓய்ந்து மறைந்து விடும் என்று, ஆனால் சென்ற வருடம் இந்த வருடம் நடந்த நிகழ்வுகள்,  இன்னும் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் சிறு சிறு சாதிய மோதல்கள்,  இண்டெர்நெட்டில் விவாதிக்கப்படும் சின்மயி விவகாரங்கள், மிகச்சமீபத்தில் தர்மபுரி அருகே கூட்டாக நிகழ்ந்த சாதிய தாக்குதல் தீ வைப்பு சம்பவங்கள் போன்றவை நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது என்பதை காட்டுகிறது.

 மதுரையில் பசும்பொன் தேவர் குரு பூஜையில் நிகழ்ந்த கலவரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வண்ணம் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது பல சாதிய சங்கங்கள், மதுரை மாவட்ட கலெக்டர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார், அந்தளவுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழக்கூடும், அதனால் விடுமுறை.

 நாட்டில் மழை இல்லை, உயர்ந்து வரும் விலைவாசி, அடிப்படை வசதியின்மை என பல பல பிரச்சினைகளை பற்றி கவலை பட நிறைய இருக்கிறது, இன்னும் 2025ல் ஒருவரின் போக்குவரத்து பயண செலவு மட்டும் ரூ.20,000/- ஆகும் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. 

 இதையெல்லாம் சட்டை செய்வதாக இல்லை இந்த சா திய தலைவர்கள் மற்றும் அரசியல் செய்பவர்கள்...இவர்களது ஒரே குறிக்கோள் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏதாவது செய்து தம்மை முன்னிறுத்தி மக்கள் தன் முகத்தையும், தங்களின் சங்க-அரசியல்-சாதிய இருப்பை மக்களிடத்தில் நினைவு படுத்தி கொண்டே இருக்க என்னென்னவோ செய்யப்படுகிறது இவர்களால், அது கலவரத்தில் உயிர் பலியில் முடிந்தாலும் கவலையில்லை இவர்களுக்கு.

 ஆரோக்கியமான போராட்டங்கள் வரவேற்கத்தக்கது ஆனால் இங்கு எது ஆரோக்கியம் என்பதில் மாற்றுக்கருத்து வருகிறது.

 இனி தமிழகத்தில் சாதி சங்கங்கள் இல்லா ஒரு கட்சி ஆட்சிக்கு வரமுடியாது என்பது தெளிவாக தெரிகிறது, தந்தை பெரியார் இறந்து பல வருடங்கள் ஓடிவிட்டன என்பதை அறிய முடிகிறது, அம்பேத்கர் என்பவரை ஒரு சிறந்த சட்ட மேதையாக பார்க்காமல் மாறாக ஒரு சாதி சார்ந்த அடையாளப்படுத்தப்படும் நபராக ஆகிவிட்டார் என்பதும் தெரிகிறது.

 கடந்த தினங்களில் ஒரு ஈழ சகோதரியின் பேட்டியின் ஒரு இடத்தில் இப்படி கெஞ்சியிருப்பார் ஈழத்திற்காக குரல் கொடுத்து வரும் "இந்திய அரசியல்வாதிகளே எங்களை வைத்து எந்த வியாபாரமும் செய்யாதீர்கள்" என்று. 

 சாதி மோதல்கள் இனி நிறைய வரும் என தெரிகிறது....நாம் கெஞ்சினாலும் தமிழகத்தில் சாதிய மோதல்கள் நடக்காமல் இருக்குமா? சாதிய தலைவர்கள் விடுவார்களா?

 நிச்சமாக நாம் வசிப்பது மனித மூளை வளர்ச்சியடைந்தாக சொல்லப்படும் இண்டர்நெட் யுகத்தில் இல்லை என நம்புவோமாக...
(இக்கட்டுரை எழுதி விட்டு 3 நாட்கள் கழித்து ஏதேனும் மாற்றம் இருந்தால் செய்யலாம் என வெளியிடாமல் வைத்திருந்தேன் அதற்குள் இதோ நடந்து விட்டது தர்மபுரி சாதி கலவரம்)