Pages

Wednesday, September 28, 2011

முரட்டு மவுனம்


நம் மக்கள் கடைபிடிக்கும் மவுனம் இருக்கிறதே!!! அந்த முரட்டு மவுனம் அசாத்தியமானது, ஆம். உலகில் உலகத்தை விடுங்கள் இந்தியாவில் மற்ற மக்கள் பாதிக்கப்படுவதை கண்டும் காணாமலும், பட்டும் படாமலும், விட்டு விடுவதில் நம் மக்களுக்கு நிகர் யாருமில்லை,
உதாரணத்திற்கு, தலித்கள் விடுதலை- அவர்களுக்காக போராடும் கட்சிகள் அவர்களை ஓட்டு வங்கிக்காக மட்டும் பயன் படுத்துவது அறிந்ததே ஆனால் இன்று நேற்றல்ல காலா காலம் தொட்டும் அவர்கள் பாதிக்கப்படுவது அதற்காக யாரும் வலிமையாக குரல் கொடுத்ததாக தெரியவில்லை அம்பேத்கர், பெரியார் தவிர்த்து.

அண்மையில் நடந்த பரமகுடி சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு சும்மா ஒரு வாய்மொழி அறிக்கையோடு சரி. தலித்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது, அவர்களுக்காக போராடுபவர்களும் தாங்கள் slogan களாக வைக்கப்படும் திருப்பி அடி, திருப்பி புடி etc...ஒன்றும் புரியவில்லை நமக்கு. கூட்டத்தை காண்பித்து சீட் வாங்கி உட்கார்ந்தாகி விட்டது அவ்வளவுதான் ஏனெனில் கூட்டணி ஆயிற்றே ஒன்றும் பேச முடியாது.
வடகிழக்கு மாகாணங்களில் நிலவும் அரச பயங்கரவாதத்தை பற்றி  நம் தலைவர்கள் பேசுவதே இல்லை, அதாவது அவர்களுக்கு தெரியாது போலும் மற்ற செய்திகளை பற்றி, நாட்டில் பிற பகுதியில் என்ன நடக்கிறது என்ற கவலை கிடையாது போலும் டெல்லிக்கு போய் வருவதோடு சரி. பாதிக்கப்பட்டவர்களுக்காக யாரும் பரிந்து பேசுவோர் இல்லை.
காஷ்மீரில் வாரத்திற்கு ஒரு முறை காணாமல் போகும் நபர்கள் பற்றி, நமது இராணுவம் நிகழ்த்தும் வல்லுறவுகள் பற்றி, நடையில் உள்ள கடுமையான சட்டங்கள் பற்றி, ஒரு மாநிலமே அந்த மக்களே சில வருடங்கள் பின் தங்கிய நிலைபற்றி, இவையெல்லாவற்றையும் பற்றி அந்த மக்கள் தனது குடும்பத்தோடு தெருவில் வந்து போராடினாலும், ஒரு நாதியில்லை சீண்டுவதற்கு, ஆதரவாக குரல் கொடுக்க யாருமில்லை, உதவிக்கரம் நீட்ட யாரும் இல்லை.


நன்றாயிருக்கிறது நம்மவர்கள் காக்கும் இந்த முரட்டு மவுனம்

Monday, September 19, 2011

ஒரு சார்பு போராட்டங்கள்


கடந்த வாரம் பாலிமர் டிவியில் ஒரு விவாதம், ராஜீவ் கொலையாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனைக்காக காத்திருப்பவர்களை தூக்கில் போடக்கூடாது என்பவர்களும் - எதிர் தரப்பில் காங்கிரஸாரும் விவாதித்தனர்.

அதில் பேசிய அருள்மொழி என்ற வழக்கறிஞர் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் “குஜராத் கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்புக்கு காரணமானவர்கள் என சந்தேகிப்படுபவர்கள் தண்டனை பெற்று விட்டனர், ஆனால் அதற்கு பிறகு நடந்த கலவரத்தை இன்னார் வந்து என்னை கற்பழித்தார், இன்னார் தான் வந்து இவ்வளவு கொலை செய்தார் என சுட்டி காட்டப்படுபவர்கள் சுதந்திரமாக வலம் வருகின்றனர். இதுதான் நீதியா அதனால்தான் தூக்கு தண்டனையே வேண்டாம் என வாதிடுகிறோம் என்றார்.
குஜராத்தில் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்காக யாரும் தமிழகத்திலிருந்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை.

   ராஜீவ் கொலையாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டபிறகு, காஷ்மீரின் பரூக் அப்துல்லாஹ் இன்னும் சிலர் அப்சல் குருவுக்கு ஆதரவாக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றும்வோம் என அறிக்கை விடுத்தனர். உடனே கொக்கரித்தனர்் காவிகள்.

கூட்டு மனசாட்சியின்(!!!) அடிப்படையில் தூக்கு விதிக்கப்பட்டவர் அப்சல் குரு. அருந்ததி ராய் மற்றும் அவரது குடும்பமும்,  மனைவியும் தான் நீதிக்காக போராடுகிறார்கள். 

இவருக்காக யாரும் நம் மண்ணிலிருந்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை.

வடகிழக்கின் காந்தி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா. 10 வருடம் உண்ணாமல் போராடி வருகிறார் வடகிழக்கில் வழக்கில் உள்ள கடுமையான சட்டங்களை நீக்க கோரி. 

இவருக்காக யாரும் நம் மண்ணிலிருந்து குரல் கொடுத்ததாக தெரியவில்லை.

நாம்  இந்தியர்கள் என்றால் நீதி எல்லோருக்கும் தானே!  இவர்களுக்காக தமிழகத்திலிருந்து யாரும் குரல் கொடுத்ததாக தெரிய வில்லை.
நாம் இன்னும் பழமையில்தான் இருக்கிறோம். அதாவது, என் மொழி பேசுபவன் என்று ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்க்குள் போராடுகிறோம், மற்றவர்கள் மற்ற மாநிலத்தவர்கள், மற்ற மொழி பேசுபவர்கள் என்றால் ஒரு அறிக்கை கூட விடுவதில்லை. ஆனால் தமிழகத்தின் தலைசிறந்த தலைவர் இ.வெ.ரா பெரியார் இன்றுள்ள தலைவர்கள் போல் அல்ல, கேரளாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார் என்பதை நாம் வரலாற்றில் பார்க்க முடிகிறது.

ஆனால் தற்போது மொழி என்ற இந்த குறுகிய வட்டத்திற்க்குள் இருந்து கொண்டு தன் மொழிச்சார்ந்தவருக்காக போராடுபவர்கள் எப்படி நீதி மான்கள் ஆவார்கள், அவர்கள் எப்படி நியாயமான அரசியல் வாதிகள் ஆக முடியும்? அவர்கள் எப்படி ஜனநாயகத்தை நிலை நாட்டுவார்கள்? அவர்கள் யாரக இருந்தாலும் என்ன? எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன அல்லது சமீபமாக ஈழ விடுதலைக்காக(!) கவனிக்கத்தக்க வகையில்  நெடுங்காலமாக போராடும் நெடுமாறன்கள் ஆகட்டும் அல்லது புதிதாக வந்து தொண்டை கிழிய பேசும் சீமான்களாகட்டும்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!!!!

Thursday, September 15, 2011

என்னை கவர்ந்த புத்தகம்


என்னை கவர்ந்த புத்தகம்

சமீபத்தில் படித்த ஒரு நல்ல புத்தகம்

ஆசிரியர் தலித் விடுதலை எதில் என்பதை அருமையாக விவாதிக்கிறார்.

தலித் அரசியலிலா? கிறிஸ்தவத்திலா? தனி ஈழத்திலா? புத்தமதத்திலா? கம்யூனிஸத்திலா? 

எதில் தலித்களின் விடுதலை என்பதை அலசி ஆராய்கிறார் ஆசிரியர்.

பதிவுலகில் உள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நன்றி

Wednesday, September 14, 2011

பாபர் ஹூமாயுனுக்கு எழுதிய உயில் - Follow up 2


நமது முந்தைய பதிவில் பாபர் ஹூமாயுனுக்கு எழுதிய உயில் பற்றியும் அது பற்றி ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வந்தது பற்றியும் follow up ஆக எழுதியிருந்தோம்,

தற்போது அதே கருத்தை உடைய மற்றொரு பதிவை பார்க்க முடிந்தது அதை தங்கள் பார்வைக்கு

Tuesday, September 13, 2011

மரண தண்டனை வேண்டாமா!!!


  இன்று அதிகளவில் நடக்கும் விவாதங்கள், கூட்டங்கள், கண்டனங்கள் இவை அனைத்தும் நிச்சயமாக தூக்குதண்டனையை பற்றியதாகத்தான் இருக்கிறது.

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதில் தொடங்கி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது குரல்கள்.

சிலர் அவர்கள் நேரடி தொடர்புடையவர்கள் அல்லர் அல்லது இத்துணை வருடம் அவர்கள் சிறையில் கழித்து விட்டார்கள் என்று கூறி தூக்கை நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள், மறுபக்கம் தூக்கில் போடவேண்டும் என காங்கிரஸார்கள் ஒருபக்கம்.

சிறையிலிருப்பவர்கள் சார்பில் வாதிடுவபர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழகத்தில் தனிஈழத்திற்க்கு ஆதரவளிக்கும் ஆதரவாளர்கள் மொத்தமாக  தண்டனையே வேண்டாம் என வாதிடுகிறார்கள்.

நமக்கு ஆச்சர்யமளிக்கும் விஷயமே இந்தியாவில் அன்றாடம் அதிகரித்துவரும் குற்றங்களை, கொடூரக்கொலைகளை அன்றாடம் செய்தித்தாளில் பார்த்து படித்து வருபவர்கள் இப்படி பேசுவதுதான் ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் உள்ளது.


ராஜிவ் காந்தி கொலையாளிகள் நிரபராதிகள் அல்லது அவர்கள் தூக்கில்தான் போடப்பட வேண்டும் என்பதற்க்காக வாதிட வரவில்லை நாம், மாறாக தூக்குதண்டனையே எடுத்துவிடவேண்டும் என்று வாதிடுவது தவறு என்பதைதான் நாம் சுட்டிக்காட்ட முனைகிறோம்.


சரி, அப்படியென்றால் நொய்டாவில் குழந்தைகளை கொன்றவரை விட்டு விடலாம், கூட்டு கொலைகள் செய்தவரை விட்டுவிடலாம், போபால் விஷ வாயுவிற்க்கு காரணமானவர்களை விட்டுவிடலாம், பெண்களை கடத்தி கற்பழித்து புதைத்தவரை விட்டுவிடலாம் அல்லது ஈழ படுகொலைகளுக்கு காரண கர்த்தாவான ராஜபக்க்ஷேவை ஜெயிலில் அடைத்தால் மட்டும் போதும் வேறு எந்த கொடூர மரண தண்டனையும் வேண்டாம்  அப்படித்தானே!!!

ஏன் இப்படி வாதிடுபவர்கள் வீடுகளில் இது போன்று பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதாலா அல்லது பத்து வீடு தள்ளித்தானே வீடு எரிகிறது என் வீட்டிற்க்கு வராது என்று நினைப்பில் சொல்கிறார்களா? நமக்கு புரியவில்லை.

தூக்கு தண்டனையே இல்லாது இருக்கும் நாடுகளில் குற்ற எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் குறைகிறது என்ற ஆதாரத்தை காட்ட முடியுமா? இதை விட கடுமையான தண்டனைகளான தலை வெட்டு போன்றவை இருக்கும் நாடுகளில் குற்றங்கள் குறைவாக நடப்பதேன்?

நேர்மையாக பேசவேண்டும், மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?


நாட்டில் சிறையில் வாடுபவர்கள், அப்பாவிகள், நீதி மறுக்கப்பட்டவர்கள் இவர்களுக்காக குரல் கொடுங்கள், மனித உரிமைகள் இன்னும் பேணப்படவேண்டும் என்பதற்காக குரல் கொடுங்கள், இப்பொழுது நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் இன்னும் கடுமைவேண்டும் என்பதற்காக குரல் கொடுங்கள். அது தான் சரியானது.


ஒரு படத்தில் ஒரு காமெடியன் சொல்வார் “தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும்” என்று, சமூக சிந்தனையாளர்களுக்கு எட்டாதது படத்தில் மற்றவர்களை சிரிக்கவைக்கும் அவருக்கு எட்டியிருக்கிறது.

ஏட்டுச்சுரகாய் கறிக்கு உதவாதுதான்!!!!