இன்று அதிகளவில் நடக்கும் விவாதங்கள், கூட்டங்கள், கண்டனங்கள் இவை அனைத்தும் நிச்சயமாக தூக்குதண்டனையை பற்றியதாகத்தான் இருக்கிறது.
ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதில் தொடங்கி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது குரல்கள்.
சிலர் அவர்கள் நேரடி தொடர்புடையவர்கள் அல்லர் அல்லது இத்துணை வருடம் அவர்கள் சிறையில் கழித்து விட்டார்கள் என்று கூறி தூக்கை நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள், மறுபக்கம் தூக்கில் போடவேண்டும் என காங்கிரஸார்கள் ஒருபக்கம்.
சிறையிலிருப்பவர்கள் சார்பில் வாதிடுவபர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழகத்தில் தனிஈழத்திற்க்கு ஆதரவளிக்கும் ஆதரவாளர்கள் மொத்தமாக தண்டனையே வேண்டாம் என வாதிடுகிறார்கள்.
நமக்கு ஆச்சர்யமளிக்கும் விஷயமே இந்தியாவில் அன்றாடம் அதிகரித்துவரும் குற்றங்களை, கொடூரக்கொலைகளை அன்றாடம் செய்தித்தாளில் பார்த்து படித்து வருபவர்கள் இப்படி பேசுவதுதான் ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் உள்ளது.
ராஜிவ் காந்தி கொலையாளிகள் நிரபராதிகள் அல்லது அவர்கள் தூக்கில்தான் போடப்பட வேண்டும் என்பதற்க்காக வாதிட வரவில்லை நாம், மாறாக தூக்குதண்டனையே எடுத்துவிடவேண்டும் என்று வாதிடுவது தவறு என்பதைதான் நாம் சுட்டிக்காட்ட முனைகிறோம்.
சரி, அப்படியென்றால் நொய்டாவில் குழந்தைகளை கொன்றவரை விட்டு விடலாம், கூட்டு கொலைகள் செய்தவரை விட்டுவிடலாம், போபால் விஷ வாயுவிற்க்கு காரணமானவர்களை விட்டுவிடலாம், பெண்களை கடத்தி கற்பழித்து புதைத்தவரை விட்டுவிடலாம் அல்லது ஈழ படுகொலைகளுக்கு காரண கர்த்தாவான ராஜபக்க்ஷேவை ஜெயிலில் அடைத்தால் மட்டும் போதும் வேறு எந்த கொடூர மரண தண்டனையும் வேண்டாம் அப்படித்தானே!!!
ஏன் இப்படி வாதிடுபவர்கள் வீடுகளில் இது போன்று பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதாலா அல்லது பத்து வீடு தள்ளித்தானே வீடு எரிகிறது என் வீட்டிற்க்கு வராது என்று நினைப்பில் சொல்கிறார்களா? நமக்கு புரியவில்லை.
தூக்கு தண்டனையே இல்லாது இருக்கும் நாடுகளில் குற்ற எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் குறைகிறது என்ற ஆதாரத்தை காட்ட முடியுமா? இதை விட கடுமையான தண்டனைகளான தலை வெட்டு போன்றவை இருக்கும் நாடுகளில் குற்றங்கள் குறைவாக நடப்பதேன்?
நேர்மையாக பேசவேண்டும், மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?
நாட்டில் சிறையில் வாடுபவர்கள், அப்பாவிகள், நீதி மறுக்கப்பட்டவர்கள் இவர்களுக்காக குரல் கொடுங்கள், மனித உரிமைகள் இன்னும் பேணப்படவேண்டும் என்பதற்காக குரல் கொடுங்கள், இப்பொழுது நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் இன்னும் கடுமைவேண்டும் என்பதற்காக குரல் கொடுங்கள். அது தான் சரியானது.
ஒரு படத்தில் ஒரு காமெடியன் சொல்வார் “தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும்” என்று, சமூக சிந்தனையாளர்களுக்கு எட்டாதது படத்தில் மற்றவர்களை சிரிக்கவைக்கும் அவருக்கு எட்டியிருக்கிறது.
ஏட்டுச்சுரகாய் கறிக்கு உதவாதுதான்!!!!