Pages

Monday, February 28, 2011

மக்களை பிடித்த தீராத பிணி - வட்டி


ஈரான் மற்றும் இன்ன பிற ஆசிய நாடுகளில் ஒரு டீ குடிப்பதற்கு ஒரு பை நிறைய பணம் எடுத்து செல்ல வேண்டும், அந்த அளவுக்கு அந்த நாடுகளின் நாணய மதிப்பு அதள பாதளத்தில் வீழ்ந்து விட்டதனால்தான் அப்படி ஒரு நிலை

சில ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை கவனித்தோமானால் மக்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல நாட்கள் ஆகியிருக்கும், நல்ல உடை உடுத்தி பல மாதங்களாகியிருக்கும் அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் தாழ்ந்து போயிருக்கும், உணவு, உடை, இருப்பிடத்திற்க்கான போராட்டம் மிகைத்திருக்கும். காரணமும் அதேதான் அவர்கள் நாட்டு நாணய மதிப்பு ஒன்றுமில்லாமல் போயிருந்த காரணத்தினால்தான். 

உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி பேரிடியாக இருந்த சமயத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை எந்த அளவிலும் பாதிக்கபட வில்லை.

ஆனால் நமக்கு தெரியாமல் உள்ள சீரியஸான விஷயம் ஒன்று உள்ளது அதுதான் நாட்டின் மீதுள்ள கடன் சுமை,

இந்தியாவின் கடன் சுமை 33 லட்சம் கோடிகள்

தமிழ் நாட்டின் கடன் சுமை 1 லட்சத்து 4000 கோடிகள்

இது வருடா வருடம் அதிகரித்து வருவதுதான் வேதனை, எனக்கென்ன நான் நிம்மதியாக உள்ளேன், நான் சம்பாதிக்கிறேன், சொத்துக்கள் சேர்க்கிறேன், வங்கி இருப்பு இவ்வளவு என நாம் நிம்மதியாக இருந்து விட முடியாது. நம் நாட்டின் நாணய மதிப்பு ஒரே இரவில் சரிந்தால் நிலை, நம் பணகட்டுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்.

உலகில் ஒரு பக்கம் பணம், பணம் இருப்பவர்களிடம் சேர்வதும் ஏழைகள் மேலும் ஏழைகளாக போவதற்க்கும் முழு முதற் காரணமாவது வட்டியை சார்ந்த பொருளாதாரமே.

ஆனால் நாம் இதை யாரும் உணர்ந்து கொள்வதாகவே தெரிய வில்லை,

உதாரணத்திற்க்கு ஒரு பொருளின் உற்பத்தி விலை 2 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த நிறுவனமோ அல்லது அதன் உற்பத்தியாளரோ பட்ட கடனுக்கு வட்டியாக ஒரு தொகை அந்த பொருளின் மேல் வைக்கப்படுகிறது அதற்கு பிறகு நம் கைக்கு அப்பொருள் 10 ரூபாய்க்கு வந்து கிடைக்கும்.

இதிலிருந்து யார் அந்த மறைமுக வட்டிக்கு காசு கொடுக்கிறோம், மக்கள்தான். இதனால்தான் அனைத்து பொருட்களும் அதன் உற்பத்தி விலையுடன் லாபம் சேர்த்து குறைந்த விலைக்கு விற்க முடியும் ஆனால் அந்து நிறுவனம் பட்ட கடன், வட்டி எல்லாம் சேர்ந்து அந்த பொருளின் மேல் விடிகிறது , அப்பொருள் அத்தியாவசியமானதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் தங்கள் தலை மேல் சுமந்து கொள்ள நேரிடுகிறது.

இங்கு கந்துவட்டி, மீட்டர் வட்டி என பல கந்து வட்டிகள் மக்கள் முன்னிலையில் இருந்தாலும் அதை அனைவரும் தவறு என்று மறுப்பதிற்க்கில்லை. ஆனால் நம்மை ஆண்டிகளாக்கும் நம் கண்களுக்குத் தெரியாத வட்டிகள் நாட்டில் மலிந்துள்ளன. 

இதனால் நாடு ஏதோ செழிப்படைவது போல் இருந்தாலும் அதன் வேரை செல்லரித்து விடுகிறது இந்த வட்டி. அதனால் நாடும் நாட்டு மக்களும் முன்னேற முடியவே முடியாது ஆனால் எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்து விடும் பொருளாதார கொள்கை தான் இந்த வட்டியை சார்ந்த பொருளாதாரக் கொள்கை.

நம் நாட்டில் வட்டியில்லாத முதலை(Capital) நம் அரசே கொடுத்து, யார் தொழில் செய்ய முன் வருகிறார்களோ,யாருக்கு தகுதி இருக்கிறதோ அவர்களுக்கு சொத்து அல்லது வேறு உத்திரவாதத்துடன் வட்டியில்லாத வகையில் தொழில் தொடங்க ஊக்குவித்து பாருங்கள், அந்த நபர் எவ்வளவு உற்சாகத்துடன் அந்த தொழிலில் ஈடுபடுவார் என்று. உற்பத்தி பொருட்கள் மிக குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கப்பெறலாம். இதை இல்லை என்று யாராலும் மறுக்க முடியுமா?

ஒரு பக்கம் உணவிற்கான இடங்கள் குறைந்து வருவது மற்றொரு பக்கம் வட்டியை சார்ந்த பொருளாதாரத்தால் நாட்டில் ஏழைகள் அதிகரிப்பு, ஆக மொத்தம் வரும் காலத்தில் இந்தியா மற்றொரு நாட்டிற்கு தானாகவே காலணியாவதை யாராலும் தடுக்க முடியாது.

பின்பு உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் நாட்டில் உள்நாட்டு போர், கலகங்கள் என்று நாடே சீர்கேடாகிவிடும் ஆப்பிரிக்க நாடுகள் போல.

வட்டி என்ன அவ்வளவு மோசமானதா? நாம் என்ன ரொம்ப பேசுகிறோமா? இல்லை உண்மை இதுதான். பெரிய கம்பெனிகள் முதல் அன்றாடங்காய்ச்சி வரை அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் ஒரு முக்கியமான நோய்தான் இந்த வட்டி.

உங்களுக்கு அருகில் உள்ள யாராவது வியாபாரியிடம் போய் நீங்கள் வட்டியில்லாம் கடன் பெற்று வியாபாரம் செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டுப்பாருங்கள், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று. அவர்களுக்குதான் அதன் அருமை தெரியும்.

நம் நாட்டில் உள்ள வங்கிகளை அனுகினால் அவர்கள் ஏராளமான விவசாயத்தொழில்களுக்கு கடனும் அரசாங்க மானியமும் தருவதாக சொல்வார்கள், மானியம் போக மீதி உள்ள தொகைக்கு வட்டி கட்டிதான் ஆகவேண்டும். 

அதனால்தான் நாட்டில் விவசாயிகள் தற்கொலைகள் நடப்பதை பார்க்கிறோம். இது எதனால்?

நான் அந்த அளவில் பொருளாதரத்தில் வல்லுனர் அல்ல ஆனால் எனக்கு தெரிந்த வகையில் வட்டியின் கொடுமை பற்றி சொல்ல முனைந்துள்ளேன்.

உலகில் சில நாடுகளில் வட்டியில்லாத வங்கிகளும், இந்தியாவில் சில குழுக்களும் வட்டியில்லாத கடனை கொடுத்து வருவது பாராட்டத்தக்கது. இன்னும் வட்டியில்லாத வங்கியின் நடைமுறைகளை நான் அறியும் பட்சத்தில் அதை தனி பதிவாக வெளியிடலாம்.

நன்றி

Monday, February 21, 2011

பெண் குழந்தைகள்


இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 50 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதாக சொல்கிறது ஆய்வு.

இன்றும் பெற்றோர்களிடையே, இந்திய மக்களிடையே பெண் குழந்தைகள் என்றால் சிறிது இளக்காரம்தான். 

இன்றும் கசப்பாகத்தான் இருக்கிறது தனக்கு பெண் குழந்தைகள் பிறந்தது என்றால்.

அதனாலேயே அனுதினமும் அழிக்கப்பட்டுவருகிறது பெண் சிசுக்கள்,
படித்தவர்கள், பாமரர்கள் என்றில்லாமல் பெண் சிசுக்கொலைகள் நமது நாட்டில் நடந்து வருவது வருந்தத்தக்க விஷயம்.

முன்னொரு காலத்தில் ஒரு விவாதம் அதாவது பெண்களுக்கு ஆன்மா இருக்கிறாதா என்றொரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது, பின்பு பெண்களை அடிமைகளாகவும், பிள்ளை பெற்றுத்தரும் பொருளாகவும் பார்க்கப்பட்டனர்.

மதகுருமார்களால் வெருப்புக்குள்ளானார்கள் பெண்கள். பெண்கள் என்றால் அசிங்கம், தீட்டு என்று பலவாறாக.

அதன் தொடர்ச்சிதான் பெண்களை வெறுப்புக்கண்ணோடு பார்க்கத்தோன்றியது. சமூகத்தில் ஒருவருக்கு பெண் குழந்தை பெற்றால் அது இழுக்காக பார்க்கப்பட்டது தொடர்ச்சியாக அது பெண் குழந்தைகளை அழிக்கத்தூண்டியது.

ஆனால் இன்று இத்தனை ஆண்டுகள் கடந்தும், இவ்வளவு கொள்கைகள், கோட்பாடுகள், நாகரீகம், நவீன யுகம், இண்டெர்நெட் என்று எவ்வளவோ இருந்தாலும் இந்திய மக்கள் மட்டும் ஏன் இப்படி திருந்தவே மாட்டேன் என்கிறார்கள் என்று தெரியவில்லை. மேற்சொன்ன வருடத்திற்கு 50 லட்சம் கருக்கொலைகள் என்பது சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே.

இதிலிருந்து இந்த படித்த நவீன யுகத்திலும், 2020ல் உலக வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் நம் நாட்டில் இப்படியெல்லாம் நிகழும் நிகழ்வுகள் நம்மை காட்டுமிராண்டிகளாகதான் காட்டுகின்றன.

பெண்கள் நாடாளுகிறார்கள் அனைத்து துறையிலும் கோலோச்சுகிறார்கள் அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு வலைப்பூதளத்தில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது அந்த வலைப்பூவின் பெயர் மறந்து விட்டேன், அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் எதார்தத்தை பெண்குழந்தைக்ளின் அல்லது பெண்களின் உண்மை நிலவரத்தை ஒரு பெற்றோராக இருந்து அனுபவபூர்வமாக சொல்கிறார், பெண்குழந்தைகள் ஆண் குழந்தைக்கு மேலானவர்கள் என்று. ஒரு பெண்குழந்தை பெற்றால் பாக்கியசாலி இரண்டு பெண்குழந்தைகள் பெற்றால் மகா பாக்கியசாலி என்று.

அதேதான் நானும் சொல்லவருவது தற்பொழுது நாட்டில் நடந்து வரும் நிகழ்வுகளும், இந்திய குடும்பங்களை உற்று நோக்கினால் உணர்ந்து கொள்ளலாம் பெண்குழந்தைகளின் மேன்மையை.

ஒரு ஆண் குழந்தைக்கு வயதுக்கு வந்தவுடன் குடும்பம் உறவினர்கள் தவிர வேறொரு வாழ்க்கை இருக்கிறது அவனுக்கு, வெளியில் என்ன வாழ்க்கை வாழ்கிறான் என்பதையும், எங்கு போகிறான் எங்கு வருகிறான், அவனது வெளிஉலக பழக்கம் என்ன, பழக்கவழக்கங்கள் என்ன, அவனது அறிவு எதை நாடுகிறது, என்பதை எல்லாம் நாம் அறிந்து கொள்ளமுடியுமா? மிகப்பாரமானதும், மிகச் சிரமமானதுமான விஷயமாக்கும் அது.

அதனால்தான் எத்தனையோ ஒழுக்க சீலர்களான பெற்றோர்களுக்கு ஒழுக்கக்கேடு உடைய பிள்ளைகள் இருப்பதை பார்க்கிறோம்.

அதே ஒரு பெண்குழந்தை வயதுக்கு வந்தவுடன் அவளை எளிதில் கண்காணித்து விடலாம், எப்படியும் வீட்டிற்கு வந்து விடுவாள், வீட்டில் சிறிது உஷாராக இருந்தாலே கெட்டு போவதற்கு உண்டான வழிகளை அடைத்துவிடமுடியும் பெற்றோர்களால். மேலும் எதார்தத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் நிறைந்தவர்கள் பெண் குழந்தைகள்.

சரி இது ஒருபக்கம் இருக்கட்டும், நாம் வயதானால் நாம் நல் ஒழுக்கங்களை பேணிவளர்த்த ஆண் பிள்ளைகள் நம்மை கண்ணியப்படுத்தும் என்பது எந்தளவுக்கு உறுதியாக நம்பமுடியும், முடியாது. ஒரு மனிதனது வாழ்வு இரண்டு முக்கிய தருணங்களில் மாறுகிறது ஒன்று அவன் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது மற்றொன்று திருமணத்திற்கு பின்பு.

சம்பாதித்த பிறகு கூட சரியாகி விடும் மனிதன், இரண்டாவது விஷயத்தில் திணருகிறான். லேசான மனக்கசப்புகளுக்கு கூட அவன் பெற்றோர்களை கடிந்து கொள்வதில் ஆரம்பித்து, முதியோர் இல்லங்களில் வந்து முடிகிறது சில பெற்றோர்களுடைய வாழ்க்கை.

இந்த விஷயங்களில் பெண்பிள்ளைகள் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

ஆதலால் ஒரு பெண் பிள்ளையானால் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் இரண்டு பெண்குழந்தைகளானால் மாகா பாக்கியசாலிகளே.






Thursday, February 10, 2011

ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் மொழியில் "சமூக விடுதலை”


சமீபத்தில் ஒரு நிகழ்வு..

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி தனது மெய்காப்பாளரை தனது ஷூவை துடைக்கச் சொல்கிறார், இதை சிறிதும் எதிர்பாராத அந்த அதிகாரி குனிந்து துடைக்கிறார், (வேறு என்ன செய்ய முடியும்).

இவர் துடைத்துக் கொண்டிருக்க அவர் மற்றவர்களுடன் தனது பேச்சை தொடர்ந்துள்ளார்.

மாயாவதி இதுபோல் சர்ச்சையில் முதல் தடவை அல்ல.

எத்தனையோ கோடி ரூபாய்க்கு தொண்டர்களால் மாலை அணிவித்தது, அரசு செலவில் தனக்கு சிலை என அவர் தன்னால் முடிந்த தொண்டை(!) செய்துதான் வருகிறார்.

இதுதான் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் தங்களுக்கு கிடைத்த வெற்றி என நினைப்பார்களோ, ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு அதிகாரம் கிடைத்தால் எவ்வளவோ ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தலாம் ஆனால் இவர் என்னவென்றால்.......

தான் ஒரு ஒடுக்கப்பட்டவர் என்று பிரச்சாரத்தின் மூலம் ஆட்சிவந்து அனைவரையும் கவர்ந்தார், இந்தியாவின் பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் முதல்வராகிவிட்டார் இந்தியா முன்னேறி வருகிறது என்று நினைத்தவர்களுக்கு மாயாவதியின் செயல்கள் சதிலீலாவதி போல் இருப்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாகதான் உள்ளது.

தனது ஷூவை துடைத்தவர் மேல் ஜாதி அதனால் அவர்களை இழிவு படுத்த நினைக்கிறாரா? அல்லது ஒரு ஆணை தன் கீழ்படிய வைத்த நினைப்பா? என்னவென்று தெரியவில்லை.

இதுதான் சாதி ஒழிப்பில் ஈடுபட்ட தலைவர்கள் நடந்து கொள்ளும் விதமா? இது போன்ற நிகழ்வுகள்தான் அனைத்து மக்களுக்கும் ஜாதியின் கொடுமை பற்றி பறை சாற்றும் விதமா?

இந்த நிகழ்வை பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? அதை நான் இங்கு எழுதினால் சர்ச்சையாகிவிடும். 

நாமும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதில் சளைத்தவர்கள் இல்லை, 

இங்கிருக்கும் ஒரு ஒடுக்கப்பட்டவர்களுக்கான கட்சியின் மாவட்ட பொருப்பில் இருப்பவர் செய்யும் கூத்து இருக்கிறதே சொன்னால் ஒரு கட்டுரை போதாது, சகோதர சமுதாயத்தை தாக்குவதாகட்டும், கட்டப்பஞ்சாயத்தாகட்டும் இன்னும் எவ்வளவோ, இது அந்த கட்சித் தலைமைக்கும் தெரிந்திருந்தும் எந்த வித நடவடிகையும் இல்லை அவர்மேல்.

நான் கேட்கிறேன் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் மொழியில் சமூக விடுதலை என்பது இதுதானா? 


மற்ற சமூகத்தினர் தன்னை “மரியாதையுடன்” நடத்தவேண்டும் என ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் நினைப்பது இப்படித்தானோ?


மிகவும் வருந்த தக்க விஷயம் என்னவெனில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாய்த்த தலைவர்களை பற்றித்தான்.

செய்தி உபயம் பாலைவனத்தூது










Wednesday, February 9, 2011

எருமை மாடும், விவசாயமும்


முன்பெல்லாம் நல்லா படிக்காத என்னை போன்ற மக்கு பிள்ளைகளை பெற்றோர்கள் திட்டுவார்கள், படிப்பு ஏறலைன்னா போய் எருமை மாடு மேய்க்க வேண்டியதுதான் என்று.

இப்பொழுது அப்படி சொல்ல முடியாது ஏனெனில் மாடு மேய்பதென்பது நல்ல வருமானமுள்ள, நிம்மதியான தொழில் இன்றைய நிலையில்.

அதிலும் எருமை மாடு மேய்பதென்பது அதை விட அருமையான லாபம் தரக்கூடிய தொழில், பால் அடர்த்தி மிகுந்தது. அதனால் பிள்ளைகளை திட்ட வேறு ஏதாவது புதிதாகத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் இப்பொழுது இவ்வித தொழில்களை யாரும் செய்வதற்கு முன் வருவதில்லை. வருங்காலத்தில் நமது நாட்டு எருமை மாடுகளை நம் பிள்ளைகளுக்கு பள்ளி பாட புத்தகத்தில்தான் காட்ட முடியும் என்று நினைக்கிறேன்.

வருங்காலத்தில் உலகில் லாபம் தரக்கூடிய தொழில் ஒன்று உண்டென்றால் அது நிச்சயம் விவசாயமாகத்தான் இருக்கும், 


ஆனால் சோழ வள நாடான தஞ்சை தரணியிலேயே விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது, தற்போது உள்ள கல்வி சூழ்நிலை,மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதைகள் போன்றவற்றால் அதிகம் பாதிப்படைந்தது விவசாயமும், நிலங்களும்தான்,

அதிகமும், உடனேயும் பணத்தை அள்ளும் வேலைகளுக்குதான் மவுசு அதிகம் மாணவர்களிடையே.. பின்பு என்ன...யார் உட்கார்ந்து... விவசாயம் படித்து....முன்னேறி...எப்பொழுது பணம் சம்பாதிப்பது.......இதெல்லாம் எப்பொழுது நடக்கும்.....

ஆனால் அதிசயதக்க விதத்தில் வருங்காலத்தில் விவசாய நிலம் வைத்திருப்பவர்தான் மிகுந்த மரியாதைக்குரியவராக இருப்பார் என்பது நிச்சயம்.

விட்டால் நகர வளர்ச்சிக்காக காடுகளின் மேலும் கைவைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


பாரதியார், காணி நிலம் வேண்டும்,
அழகிய மாளிகை வேண்டும்
அதில் 10 தென்னை மரங்கள் வேண்டும்
அங்கு குயில் வரவேண்டும்,
தென்றல் வரவேண்டும்,
 என்று பாடுவார்,  கேட்க நல்லாத்தான் இருக்கு


வரும்காலத்தில் இதைபோல் ஏட்டிலும், கற்பணையிலும் பார்த்தால்தான் உண்டு, 
                                 
ஆக எல்லோரும் இப்பவே காணி நிலத்தையும், எருமை மாடுகளையும் வாங்கி சேமித்து விடவும், பிற்காலத்தில் உதவும், பிளாட் போட இல்லை நமக்கு நாமே விளைத்து சாப்பிடுவதற்கு...








Wednesday, February 2, 2011

இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல

சமீப காலங்களாக செய்திகளிலும் அல்லது எதை திறந்தாலும் அடிபடுவது ஊழல்கள் பற்றி,

எந்த கட்சிகளும் பாரபட்சமின்றி தன் பங்கிற்கு இந்தியாவில் செய்தாகி விட்டது ஊழல்களை,

அது அவ்வப்போது வரும் பின்பு நாம் மறந்துவிடுகிறோம்.

அந்த வகையில் இந்திய அரசு சுவிஸ் அரசிடம் கேட்கும் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விடயம்தான் நான் எழுதுவது,

சுவிஸ் வங்கியில் உள்ள தொகை

280,00,000,000,0000 - 280 லட்சம் கோடி - இந்தியர்களது பணம் மட்டும்

இந்த தொகையை வைத்து கீழுள்ள மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு மின்னஞ்சல் வந்தது எனக்கு, அது அப்படியே தருகிறேன்
  • 30 வருடத்திற்க்கு வரியில்லாத இந்திய பட்ஜெட் போட முடியுமாம்
  • 60 கோடி வேலைவாய்பை ஏற்படுத்த முடியும் நமது நாட்டில்
  • எந்த கிராமத்திலிருந்தும் புது டெல்லிக்கு நான்கு வழி சாலைகள் அமைக்க முடியும்
  • 500 பொது நல திட்டங்கள் இலவசமாக தரமுடியும்
  • 20 கோடி மாணவர்களுக்கு 50 வருடங்களுக்கு இலவச கல்வி தரமுடியும்
  • ஒவ்வொரு இந்தியனும் 2000/-ரூபாய் மாதாமாதம் 60 வருடத்திற்கு பெறமுடியும்
  • உலக வங்கியிடமும், IMF யிடமும் நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை


சிந்தியுங்கள் நமது பணம் எப்படி பெரும் பண முதலைகளிடமும், அரசியல் வாதிகளிடம் அடைபட்டுள்ளது என்று


மேலும் காமென்வெல்த் ஊழல்கள், ஆதர்ஷ் கட்டட ஊழல், 2G அலைகற்றை ஊழல், கர்நாடகா எதியூரப்பா ஊழல்கள்...மற்றும் பல பல.......... உள்ளன அவைகளை நாம் இங்கு சேர்க்க வில்லை.


இதை அனுப்பி தந்த நண்பர் ஹாஜா அவர்களுக்கு நன்றிகள் பல.


இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?????