Pages

Friday, June 25, 2010

மனிதர்களே! நீங்கள் வாழ இந்த பூமியில் இடம் இல்லை



இனி வர இருக்கும் மனிதர்களே இனி நீங்கள் வாழ இந்த பூமியில் இடம் இருக்காது, அப்படியே இருந்தாலும் தகிக்கும் மணல் வெளியில்தான் வாழ வேண்டியிருக்கும், இரவில் மட்டுமே நீங்கள் வெளியில் வரமுடியும் பகலில் வர இயலா ஏனெனில் பகலில் உங்களை கரிக்கும் சூடு, விவசாயம் செய்ய பூமி இருக்கும் ஆனால் அதில் ஏதும் விளையா, தண்ணீர் பூமியின் மேற்பரப்பில் எங்கும் காணா, பூமியினுள்ளும் இரா, பச்சை கலரையும் மற்றும் மரத்தையும் புகைபடத்தில் மட்டுமே நீங்கள் பார்க்கலாம்.

உணவு பற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை.

ஆக உங்களது மரணத்தை நீங்கள் சுவைக்க காத்திருக்க வேண்டியதுதான், அது ஒன்று மட்டுமே உங்களை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து உங்களை விடுவிக்கும்.

ஏன் இப்படி, எதற்கு இவ்வளவு கோபம், வெறுப்பு, காரணம் இருக்கிறது.

காரணம் பூமியில் வேகமாக அழிக்கப்பட்டு வரும் மரங்கள், வயல்கள், காடுகள், நன்னீர் ஏரிகள், குளங்கள், ஆறுகள் இதனால்தான்.




மிகவும் வருத்தத்தக்க விசயம் என்னவெனில் அரசாங்கமே அதை சிறிது சிறிதாக அதை செய்து வருவதும் அல்லது கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவதும்தான்.

திருவாரூர் பக்கத்தில் ஒரு ஊர் அவ்வூரில் இருக்கும் பஞ்சாயத்தார்களோ படிப்பறிவு அற்றவர்கள் அங்கு ஒரு பொது நோக்கிற்க்காக ஒரு குளம் அழிக்கப்படுகிறது, பிறகு அதே காரணத்திற்க்காக மற்றொரு குளம் வற்ற வேண்டும் என்ற நோக்கில் அதன் சுற்றியுள்ள மக்களை அக்குளத்தினுள் தங்களது குப்பைகளை கொட்ட சொல்லப்படுகிறது.

அக்குளத்திற்கு தண்ணீர் வரும் வழியும், வடிகாலும் நாளடைவில் அடைபடுகிறது, முக்கால் வாசி தூர்ந்த பிறகு மாவட்ட ஆட்சியர் வந்து பார்த்து விட்டு வடிகால் வசதியும், நீர்வரத்து முகமும் இல்லாததால் நீங்கள் தூர்த்துவிடுங்கள் என்று சொல்லப்படுகிறது. அதை முடித்தாகிவிட்டது.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் - சோழவள நாடு சோறுடைத்து
யார் சொன்னது அதெல்லாம் அந்தக்காலம்.

இந்த இடங்கள் என்றில்லாமல் தமிழகத்தில் வேகமாக வளரும், அதிக லாபம் தரக்கூடிய ஒரு தொழில் உண்டென்றால் அது ரியல் எஸ்டேட் தொழில்தான். நான் கேள்விப்பட்டேன் ஒரு விளைநிலத்தை தரிசாக சிறிது காலம் காண்பித்தால்தான் அதை பிளாட் போட அனுமதிப்பார்கள் என்று, அப்படி 2 வருடம் இந்த விளைநிலங்கள் கிடப்பில் போடப்பட்டு பிறகு பிளாட் போடப்பட்டு 60*40 மட்டும் இலட்சக்கணக்கில் விற்க்கப்படுகிறது.

பெருகிவரும் வாகனப்பெருக்கத்தால் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது, அகலப்படுத்தப்படுகிறது அதற்க்காக சாலைகளின் இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. முன்பெல்லாம் சாலைகள் போட்டுவிட்டு அதன் இருபக்கமும் மரங்கள் நடப்படும், இப்பொழுதெல்லாம் அந்த மாதிரியான பழக்கத்தை பார்க்க முடியவில்லை. வெட்டுவதோடு சரி.

நன்கு உற்றுநோக்கினால் வருடா வருடம் நம்மால் வெயில் அதிகரித்து வருவதை உணர முடியும். மழை குறைந்து வருவதும் அல்லது சீக்கிரம் வந்து சென்றுவிடுவதையும் அவதானிக்கலாம்.

பூமியில் ஒரு பகுதியில் வெயில் அதிகரிப்பு மறுபக்கம் கடுமையான வெள்ளம் பேரழிவு.

இவையனைத்திற்க்கும் காரணம் ஒன்றுதான் மரங்கள் வெட்டப்படுவதுதான்.

நியாயமான காரணங்கள்

ஆம் இதற்கும் நியாயமான காரணங்கள் இருக்கின்றதுதான்.

வால்பாறை போன்ற இடங்களில் காட்டு மிருகங்களின் தாக்குதல்களும், மலைப்பிரதசங்களில் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கும் காரணம் நாம் அவர்களின் குடியிருப்புகளுக்கு மக்கள் வந்ததுதான்,

என்ன செய்ய வீடுகள் பெருக்கம்.

மக்களுக்கு அரசு ஏற்பாடு பண்ணித்தரவில்லையெனில் போராட்டம் நடத்துவார்கள், மற்ற கட்சிகள் அதை அரசியலாக்கும் அல்லது ஆளும் கட்சி மக்களுக்கு வசதிகள் செய்து கொடுத்து பெயர் தேடிக்கொள்ளும்.

சாலைகள் அமைத்துத்தான் தரவேண்டும் அரசாங்கம், காரணம் வாகனப்பெருக்கம் அதற்கு வழி வகை செய்து கொடுக்கத்தான் வேண்டும்.

ஆனால் ஒரு பக்குவப்பட்ட மக்கள் நலனில் அக்கரை உள்ள அரசாங்கம் எந்த நாடாக இருந்தாலும் சரியான, தெளிவான சிந்தனையோடு அணுகினால் இந்த பிரச்சினைக்கு வழி தேடலாம்.

மக்கள்தொகை ஒரு நாட்டிற்க்கு பாதிப்பு அல்ல மாறாக அது ஒரு செல்வம்தான். இந்தியாவையும், சீனாவையும் பார்த்து உலகம் அதிசயக்கிறது என்றால் அதற்கு காரணம் அந்நாடுகளின் மக்கள்தொகை செல்வம்தான்.

உலகில் உபயோகத்திற்க்கில்லாத இடங்கள் கோடிக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கேட்பாரற்று கிடக்கிறது. அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர்ந்து சரியாக முடிவெடுத்து மாற்று குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்து மற்ற விளைநிலங்களை, காடுகளை அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். அதில் எந்தளவும் சந்தேகம் இல்லை.

ஆனால் நிலமை நாம் உட்கார்ந்து யோசிக்கும் அளவுக்கு சிறிய விடயம் அல்ல இது. உலகை ஒற்றுமை படுத்த இயலுமா? நடக்குமா? ஒவ்வொரு நாடும் தன் பங்கிற்கு எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக செல்கிறது அதை தடுக்க முடியாது, அதனால் இந்த உலகம் அதன் போக்கிலேயே செல்கிறது , தன் அழிவை நோக்கி பயணிக்கிறது, நாமும் சேர்ந்து பயணிக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை.

அதனால்தான் சொல்கிறேன் வருங்கால நம் மக்கள் அழியட்டும், வேறு வழியில்லை.

நாம் நிம்மதி பட்டுக்கொள்ள வேண்டியது இப்பொழுதோ அல்லது நாளையோ இந்த நிலை வந்துவிடாது அவ்வளவுதான், நாம் நம் சுய நலத்திற்க்காக வருங்கால சந்ததிகளைப் பற்றி நாம் கவலைப்படாமல் இவ்வுலகை நம் இஷ்டத்திற்க்கு வளைத்து நாம் வாழ்ந்து இவ்வுலகை குப்பைக் கூடையாக்கி விட்டு மறைகிறோம்.

ஆனால் வரும் சமுதாயம் நிச்சயம் நம்மை சபிக்கும் என்பது உறுதி.

Friday, June 18, 2010

சுருங்கிவரும் மனித உள்ளங்கள்




இன்றைக்கு செய்தித்தாள்களில் இரண்டு தினங்களுக்கு முன்பு தர்மபுரி அருகே கல்யாணத்திற்க்காக சென்ற வேன் விபத்திற்க்குள்ளாக அதில் பயணம் செய்த 18 பேர் இறந்தனர், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி புரிவதற்காக வந்தனர் பக்கத்து கிராமத்து மக்கள்.

இறந்த நபர்களின் உறவினர்கள் கல்யாணத்திற்க்காக சென்று பிணமானவர்களின் 200 பவுன் நகைகள் காணவில்லை என்கின்றனர் இப்போது.

அங்கு உதவிக்கு வந்தவர்கள் காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொது மக்கள். இவர்களில் யாரை சந்தேகப்படுவது. சில விஷமிகள் எடுத்திருக்கலாம் என்கிறது காவல் துறை,

அங்கு உதவிக்கு போன நல்ல உள்ளங்களுக்கு தர்ம சங்கடம் இப்போது.

அந்தளவிற்க்கா நமது உள்ளங்கள் இருளடைந்து போயுள்ளது? ஒரு கோரமான விபத்து நிகழ்ந்திருக்கின்றது வந்தவர்கள் எத்தனைப்பேர் என்ன என்ன கற்பனைகளோடு வந்திருப்பர் தனது வாழ்நாள் இப்படி சட்டென்று முடியும் என்று நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். அப்படி இருக்கும்போது இறந்து சிதைந்து கிடக்கும் மனித உடல்களைப் பார்த்து வருத்தப்படுவது இருக்கட்டும், தனது உள்ளத்தில் சிரிதளவு இரக்கம் கூடவா இல்லாமல் அந்த பிணங்கள் அணிந்திருக்கும் நகைகளை திருடுவார்கள்?

எங்கு செல்கிறது உலகம், எப்படி மாசடைந்தது மனித உள்ளம்.

நாட்டில் நடக்கும் அநியாயம், அக்கிரமங்கள், துரோகம், இன்னும் இதைவிட கொடுமையான விஷயங்கள் எவ்வளவோ நடந்திருக்கும்போது இதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்லதான்.
மற்ற விஷயங்கள் உயிருடனிருக்கும் மனிதர்களுக்கு எதிராக நடக்கும். இங்கு செத்தவர்களுக்கு எதிராக நடக்கிறது அவ்வளவுதான்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான், ஒவ்வொரு தனிமனித உள்ளங்களும் திருந்தவேண்டும், எல்லா விடயங்களிலும். மனித மனம் சுருங்கித்தான் வருகிறது நாளுக்குநாள், நகரங்களில் அடுத்த வீட்டில் இழவு விழுந்தாளும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரிவதில்லை.

இப்படியே மனித வாழ்க்கைத்தரம் போனால் என்னவாகும். ஒருவேளை உலகம் அழிந்துவிடும் என்பது உண்மைதான் போல.

அய்கிய அரபு அமீரகம் என்ற துபாயில் சொல்ல கேள்விப்பட்டுருக்கின்றேன் அங்கு இறந்த ஒரு இளம்பெண்ணுடன் ஒருவன் உடலுறவு கொண்ட காரணத்தினால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்ட்டான் என்று, இன்று நடந்த இந்நிகழ்ச்சியும் அதுபோலதான்.

நகைகளை களவாடிய விஷமிகள் யார் என்று கண்டறிந்து கொல்லப்படவேண்டும்.

செய்தி உதவி : thatstamil.com(june 18)